×

செவ்வாய்கிரகத்துக்கான ரோவர் ஹெலிகாப்டருக்கு இந்திய வம்சாவளி சிறுமி தேர்வு செய்த பெயர் சூட்டல்

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் ரோவர் ஹெலிகாப்டருக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுமி பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு நாசா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக விண்வெளிக்கு அனுப்பப்படும் ரோவர்களுக்கான பெயர்களை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது பள்ளி மாணவர்களுக்கு இடையே போட்டி நடத்தி தேர்வு செய்வது வழக்கமாகும். தற்போது செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட உள்ள ரோவருக்கு 7ம் வகுப்பு மாணவர் அலெக்சாண்டர் மாதரின் கட்டுரையின் அடிப்படையில் பர்சிவிரென்ஸ் (விடாமுயற்சி) என்ற ஆங்கில பெயர் வைக்கப்படும் என்று நாசா கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இதேபோல் ரோவர் ஹெலிகாப்டருக்கான பெயரை பள்ளி மாணவர்கள் மூலம் தேர்வு செய்வதற்கு நாசா திட்டமிட்டது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவியின் கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ரோவர் ஹெலிகாப்டருக்கு இன்ஜெனியூட்டி (புத்திக்கூர்மை) என பெயரிடப்படவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாசாவின் டிவிட்டர் பக்கத்தில், “செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் ரோவர் ஹெலிகாப்டருக்கு. மாணவி வனீசா ரூபானி தேர்வு செய்த இன்ஜெனியூட்டி என பெயர் சூட்டப்படுகின்றது” என பதிவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 28ஆயிரம் மாணவர்கள் சமர்பித்த கட்டுரையில் வனீசா ரூபானியின் கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவி வனீசா ரூபானி அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவருக்கு அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Tags : Indian ,Mars , Mars, rover helicopter, little girl choice
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்