×

மாதவரம் பேருந்து நிலையத்தில் பழம், பூ மார்க்கெட் திறப்பு இல்லை: வியாபாரிகள் ஏமாற்றம்

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், அதையும் மீறி கூட்டம் திரள்வதால், மார்க்கெட்டை மூன்றாக பிரித்து அதன் ஒரு பகுதியை மாதவரம் ஆந்திரா பேருந்து நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்ற அரசு முடிவு செய்தது.  அதன்படி, மாதவரம் மேம்பாலம் அருகே உள்ள ஆந்திரா பேருந்து நிலைய வளாகத்தில் பழம் மற்றும் பூக்கள் வியாபாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அங்கு, பழங்கள் மற்றும் பூக்களை வியாபாரம்  செய்வதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, வியாபார கூடங்கள் அமைக்கப்பட்டன. அங்கு நேற்று முதல் மார்கெட் இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், பொதுமக்களும், வியாபாரிகளும் நேற்று காலை 5 மணி முதலே பைக், ஆட்டோக்கள், சரக்கு வாகனம் போன்றவை மூலம் ஆந்திரா பேருந்து நிலைய வளாகத்தில் குவிந்தனர்.  ஆனால், கோயம்பேடு பூ மற்றும் பழ வியாபாரிகள் ஆந்திரா பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட்டில் கடைகளை இடமாற்றம் செய்ய மாட்டோம் என்று மறுத்ததால், மாதவரத்தில் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால், பழங்கள் மற்றும் பூக்கள் வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் இதுபற்றி கேட்டபோது, முறையாக பதிலளிக்காததால் வாக்குவாதம் செய்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, நாளை முதல் மார்க்கெட் இயங்கும் என்று போலீசார் சமாதானம் செய்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். அதிகாரிகள் அறிவித்தபடி பழம் மற்றும் பூ கடைகள் நேற்று திறக்கப்படாததை பயன்படுத்திக் கொண்ட ஒரு சில வியாபாரிகள், மாதவரம் ஆந்திரா பேருந்து நிலைய வாசலில் பூ மற்றும் பழங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தனர். நாளை முதல் திட்டமிட்டபடி மார்க்கெட் இயங்கும் என்று அதிகாரிகள் அறிவித்தாலும் வியாபாரிகளின் எதிர்ப்பு காரணமாக ஆந்திரா பேருந்து வளாகத்தில் மார்க்கெட் நாளை இயங்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Tags : Madhavaram Bus Stand: Merchants Disappoint Fruit ,Flower Market Opening , Monthly Bus Stand, Fruit, Flower Market Opening, Merchants
× RELATED மருத்துவ குணம் நிறைந்த பெர்சிமன் பழ சீசன் துவங்கியது