×

நிதியின்றி தள்ளாடும் சிறு, குறு, தொழில்துறைகள் வயிறு பெருசா, உயிரு பெருசா தெரியல வேலைக்கு போறதுக்கும் வழியில்ல

* தொழிலாளர் தினத்திலும் முடங்கிய தொழிலாளர்கள்

சென்னை: ‘‘மறுபடியும் துபாய்க்கே போலாமா... இல்ல இந்த ஊர்லயே இருந்து, ஓரஞ்சாரமா உட்கார்ந்து தொழில் பண்ணலாமா?  ஒரு வழிய காட்டி தொலை. ஏன்னா, எப்பப்பாத்தாலும் நம்ம கிட்டயே ஒரு ராகுகாலம் வந்து வம்பு இழுத்துக்கிட்டிருக்கு’ என வடிவேலு ஜோசியம் பார்த்த மாதிரிதான் பல பேரோட நெலைமை இருக்கு. அவங்க கிட்ட இப்ப வம்பு இழுத்த ராகுகாலம் வேற யாரும் இல்ல. கொரோனாதான். தனியார் அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில், கொரோனாவுக்கு பிறகு வாழ்வாதாரம் என்னவாகும் என்ற அச்சம் மக்களிடையே காணப்படுவதாக  தெரிவித்துள்ளது. தொழிற்சாலைகளை நம்பியுள்ளவர்கள். கடைகள், ஷாப்பிங் மால்களில் வேலை பார்ப்பவர்கள், சேல்ஸ் மேன் போன்ற சாதாரண தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையே கொரோனா கேள்விக்குறியாக்கி விட்டது.

ஹரியானாவில் சைக்கிள் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தும், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் கூட்டமைப்பு நிர்வாகி கூறுகையில், ‘‘எங்களிடம் 400 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.  எங்களுக்கு என சிறப்பு நிதியுதவியை அரசு அறிவிக்கவில்லை. இதனால்,  லூதியானாவில் மட்டும் 40 முதல் 50 சதவீத தொழில்துறைகள் நிரந்தரமாக மூடப்பட்டு விடும்’’ என்றார். நாடுமுழுவதும், தொழில்துறை சப்ளை, உற்பத்தி, மூலப்பொருட்கள், உதிரிபாகங்கள் சப்ளை சார்ந்துள்ள, 70 சதவீத தொழில்துறைகளையாவது செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  அதேநேரத்தில், வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள், பஸ், ரயில் வசதிகள் துவங்கிய உடனேயே வீட்டுக்கு செல்ல அனுமதிக்க வேணடும் என கோரியுள்ளனர். ஊக்கத்தொகை அளித்தால் கூட வேலை பார்க்க பலர் தயாராக இல்லை. வெளிமாநிலம் சென்றவர்கள் திரும்பி வரவும் வழியில்லை.

உடல் நலம் குறித்து தொழிலாளர்களிடையே அச்சம், சரக்கு போக்குவரத்து பாதிப்பு போன்ற பல காரணங்களால் தொழிற்சாலைகள் பல மீண்டும் முழு வீச்சில் இயங்குமா என்பதே கேள்விக்குறிதான் என சில தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். வேலைக்கு போக வேண்டும் என தவிப்பு இருந்தும், வீட்டிலேயே  முடங்கியுள்ள தொழிலாளர்கள் பலர் ‘வயிறு பெருசா, உயிரு பெருசா’என்ற மனப் போராட்டத்தில் உள்ளனர். வேலை திரும்பவும் கிடைக்குமா என்ற பயமும், சிலருக்கு சோம்பேறித்தனம் ஆக்கிரமித்து விட்டது. தொழிற்சாலைகள் முடங்கிக் கிடக்கின்றன. எட்டு மணி நேர வேலை, இனிமேல் இல்லை கவலை என்றிருந்த தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் தினத்திலேயே அதை கொண்டாட முடியாமல் முடங்கி கிடக்கும் சோகம் ஏற்பட்டுள்ளது என தொழில்துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.

Tags : businesses , Small, marginal, industrial, corona, curfew
× RELATED சிறு வணிகர்களுக்கான வணிக வரி சமாதான...