×

காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் மத்திய பாஜ அரசுக்கு சாமரம் வீசுவதா?முதல்வருக்கு துரைமுருகன் கண்டனம்

சென்னை:தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி மேலாண்மை ஆணையம் பல ஆண்டுகாலமாக பல்வேறு வழக்குகள் மற்றும் பல்வேறு தடைகளைக் கடந்து, கிடைக்கவே கிடைக்காது என்று நம்முடைய எதிரிகள் சொல்லிக் கொண்டிருந்தபோது, படாதபாடுபட்டு காவிரி வழக்கில் இறுதி வெற்றி பெற்று, ஆணையம் அமைப்பதற்கு வழிவகுத்தவர், தலைவர் கலைஞர். இறுதியில், காவிரிப் பிரச்னைக்கு நடுவர் மன்றத்தில் இறுதித் தீர்ப்பு பெற்றத் தந்தது என, காவிரிப் பிரச்சினைக்கு நுனி முதல் அடி வரையில் போராடியவரும் தலைவர் கலைஞர் தான். அவர் இன்றைக்கு இருந்திருந்தால், காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கொண்டுபோய் மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்ட நிலையைக் கண்டு எவ்வளவு கொதித்திருப்பார் என்பதை நான் எண்ணிப்பார்க்கிறேன்.

காவிரி நதிநீர் மேலாண்மை விஷயத்தில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் எழுப்பியுள்ள மிக முக்கியமான பிரச்னைக்கு, துறை அமைச்சரான முதல்வர் பதில் சொல்லாமல், துறைச் செயலாளரை விட்டு, அரைகுறையாக ஒரு அறிக்கை விட வைத்திருப்பது, முதல்வர் “ரேபிட் டெஸ்ட் கிட்” விவகாரத்தில் பதற்றத்துடன் இருக்கிறார் என்பதையே காட்டுவதாக அமைந்திருக்கிறது. கோதாவரி, கிருஷ்ணா வாரியங்கள் வேறு. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் என்பது வேறு. நம் ஆணையம் முழுக்க முழுக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஸ்கீமின் அடிப்படையில் செயல்படும் ஆணையம். இந்த அடிப்படை கூட பொதுப்பணித்துறையின் செயலாளருக்கே தெரியவில்லை. இந்த லட்சணத்தில் தான் அதிமுக ஆட்சி நடைபெறுகிறது.

“ஆணையத்தின் பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்குவது தொடர்பான நடைமுறைக்காகவே, ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று, வடிகட்டிய பொய்யைக் கூறியிருக்கிறார். மாநில அரசுகள் சம்பளம் கொடுக்கும் ஒரு ஆணையத்தை, மத்திய அரசுத் துறையின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்? இந்த அடிப்படையான கேள்வியைக்கூட, தனக்குத் தானே கூட கேட்டுக் கொள்ளாமல், பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதான எதிர்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு சென்றிருப்பது, தமிழகத்தின் உரிமைகளை வஞ்சித்து - தமிழக விவசாயிகளின் ஜீவாதார உரிமையான வேளாண்மைக் கனவுகளைத் தகர்ப்பதற்கே என்பதில் துளியும் சந்தேகமில்லை.

ஆகவே எங்கள் தலைவர் கேட்டிருப்பது போல், மத்திய அரசின் இந்த முடிவை முதல்வர் எதிர்க்க வேண்டும் என்றும், தமிழக அமைச்சரவையைக் கூட்டி மத்திய அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டிட நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், தனது பதவியும் தன் அரசும் நிலைத்தால் போதும் என்று, காவிரி நீர் உரிமையைப் பறிகொடுக்க மத்திய பாஜ அரசுக்கு சாமரம் வீச வேண்டாம் என்று முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Durumurugan ,CM ,Cauvery ,Central ,Bharatiya Janata Party , Cauvery water, the BJP Government, Chief, Durairamurgan
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...