×

2020-21ம் கல்வி ஆண்டுக்கான காலண்டர் வெளியீடு பல்கலை, கல்லூரிகள் ஆகஸ்ட்டில் துவங்கும்: யுஜிசி அறிவிப்பு

சென்னை: பல்கலைக் கழகம், கல்லூரிகளுக்கு 2020-21ம் கல்வி ஆண்டுக்கான காலண்டரை யுஜிசி வெளியிட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் மாதம் இந்த கல்வி ஆண்டு தொடங்கும் என்று தெரிவித்துள்ளது. தேர்வுகள் நடத்தவும், அடுத்த கல்வி ஆண்டுக்கான பணிகளை தொடர்வது தொடர்பாக ஆராய்வதற்காகவும் பல்கலைக் கழக மானியக் குழுவின் சார்பில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த குழுக்கள் கொடுத்த பரிந்துரைகளின் பேரில், ஜூன் அல்லது ஜூலையில் தொடங்க வேண்டிய கல்வி ஆண்டை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையே அனைத்து பல்கலைக் கழகங்கள் கல்லூரிகள் பின்பற்ற வேண்டும் என்று யுஜிசி நேற்று அறிவித்துள்ளது. மேலும் அதற்கான புதிய வேலை நாட்களுக்கான காலண்டரையும் வெளியிட்டுள்ளது.

இதன்படி இந்த கல்வி ஆண்டுக்கான பணிகளான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட கல்விப் பணிகள் 2020 ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கி 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1ம் தேதியும், புதிய மாணவர் சேர்க்கைக்கு பிறகு தொடங்க வேண்டிய வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதியும் தொடங்க வேண்டும். பல்கலைக் கழக தேர்வுகள் மற்றும் கல்லூரிகளுக்கான தேர்வுகள் 2021, ஜனவரி 1ம் தேதி முதல் 25ம் தேதி வரையும் நடத்த வேண்டும். செமஸ்டர் வகுப்புகள் 2021 ஜனவரி 27ம் தேதி முதல் தொடங்கி மே 2021 மே 25ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.

அதைத் தொடர்ந்து 2021ம் ஆண்டுக்கான தேர்வுகள் 2021 மே 26ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரையும் நடத்தி முடிக்க வேண்டும். கோடை விடுமுறை 2021 ஜூலை 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை விட வேண்டும். அடுத்த கல்வி ஆண்டு 2021 ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்க வேண்டும். இந்த நெறிமுறைகளை பின்பற்றித் தான் பல்கலைக் கழகங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும்.

Tags : Universities ,colleges ,announcement ,UGC ,UGC Announcement , Calendar Publishing, Universities, Colleges, UGC
× RELATED CUET முதுநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை..!!