×

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவை இபிஎஸ், ஓபிஎஸ்க்கு ஒதுக்கீடு செய்தது செல்லும் : சசிகலா சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவை இபிஎஸ், ஓபிஎஸ்க்கு ஒதுக்கீடு செய்தது செல்லும் என்றும் சசிகலா சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியானது ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித்தலவைி அம்மா அணி எனவும், அதைப்போன்று டிடிவி தினகரன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இணைந்த அதிமுக அம்மா அணி என்று இரண்டாக பிரிந்து செயல்பட்டு வந்தனர். இதையடுத்து எதிர் எதிர் அணியாக செயல்பட்டு வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இரண்டு பேரும் இணைந்தனர். இதையடுத்து அவர்களின் அணிக்கு அதிக பெரும்பான்மை உள்ளது எனக் கூறி அதிமுக கட்சி மற்றும் இரட்ைட இலை சின்னம் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்து இந்தியா தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து மேற்கண்ட தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கு எதிராக டிடிவி தினகரன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக டிடிவி தினகரன் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது செல்லும் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து மேற்க்கண்ட வழக்கில் சசிகலா தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் போலியான உறுப்பினர்கள் கையெழுத்து கொண்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர்.

இதனை சரிவர ஆராயாமல்  தலைமை தேர்தல் ஆணையமும் அவர்களுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதைப்போல் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றமும் அதையே உறுதி செய்துள்ளது. இரட்டை இலை சின்னம், அதிமுக ஆகியவற்றின் ஒதுக்கீடு செய்ததில் அதிக முறைகேடு நடந்துள்ளதால் உச்ச நீதிமன்றம் வழங்கிய முந்தைய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் மேற்க்கண்ட சீராய்வு மனுவானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக ஆகியவற்றை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீர விசாரித்த பிறகு தான் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர்க்கு ஒதுக்கீடு செய்தது. இதை விசாரித்த நீதிமன்றமும் அதையே மீண்டும் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. அதில் எந்தவித மறுஆய்வும் செய்ய வேண்டிய அவசியமில்லை எனக்கூறி சசிகலா தொடர்ந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து அது தொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


Tags : AIADMK ,Sasikala ,OPS: Supreme Court ,SC , Double Leaf Symbol, AMP, EPS, OPS, Supreme Court
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...