×

இன்று மே தின கொண்டாட்டம்: கவர்னர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சென்னை: மே தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:
கவர்னர் பன்வாரிலால் புரோகித்: இந்நன்நாளில் நாட்டின் பொருளாதாரத்தை வளமடையச் செய்வதற்கு, தங்களின் அயராத உழைப்பையும், ஆற்றலையும் பெருமளவில் அர்ப்பணித்து, பங்காற்றிவரும் உழைக்கும் தொழிலாளர்களின் சேவையை நினைவு கூர்ந்து தேசமே அவர்களுக்குத் தலைவணங்கி மரியாதை செய்வதில் பெருமை கொள்கின்றது. தொழிலாளர் குடும்பங்களுக்கு வணக்கத்தையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளான மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின நல்வாழ்த்துகளை  தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பே உயர்வு தரும், ஒளிமயமான வாழ்விற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தங்களின் கடினமான உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்திடும் எனது அன்பிற்குரிய தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): உலக தொழிலாளர் வர்க்கம் ஆண்டுதோறும் நினைவுகூரும் மே தின விழாவை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு அசாதாரண சுழலில் கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  தொழிலாளர்கள் சிந்தும் கண்ணீருக்கு விடை தரும் வகையில் மே 1ம் தேதி அமைய வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். அனைவருக்கும் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
    
வைகோ(மதிமுக): இந்தியாவில் தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பறித்து வரும் பாஜ அரசின் கொடுமையை எதிர்த்துப் போராடுவோம். வேலை வாய்ப்பை இழந்து வாடும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் துயரத்தைப் போக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். சோதனைகளைக் கடந்து, வெற்றிகளை ஈட்ட தொழிலாளர் வர்க்கத்திற்கு மே நாள் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

ராமதாஸ் (பாமக): பாட்டாளிகள் தான் இந்திய நாட்டின் முதுகெலும்பு. அந்த முதுகெலும்புகள் இப்போது முறிந்து கிடக்கின்றன. கொரோனா வைரஸ் என்ற கொடிய கிருமி அனைத்தையும் தலைகீழாக மாற்றியிருக்கிறது. இந்த வைரஸ் கிருமியை விரட்டியடித்து, தொழிலாளர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய பொருளாதார சுழற்சியை தொடங்கி வைப்போம்.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): உலகத் தொழிலாளர் தினமான மே தினத்தில் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கக்கூடிய அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். நாகரீகம் பற்றிய சவடால்களுக்கு மத்தியில் கையால் மலம் அள்ளும் கொடுமையும் தீண்டாமையும் சாதிய ஒடுக்குமுறைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
 
முத்தரசன்(இந்திய கம்யூனிஸ்ட்): இந்த நெருக்கடியான நேரத்தில் சமூக செல்வத்தை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள், உழைக்கும் ம க்கள்  போ ராடிப் பெற்ற  உரிமைகள் அனைத்தையும் பறிப்பதில் மத்திய பாஜ அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. மதவாத வலதுசாரி சக்திகளை அதிகாரத்திலிருந்து அகற்றிட மே தினத்தில் உறுதி ஏற்போம்.

ஜி.கே.வாசன்(தமாகா): கடின உழைப்புக்குச் சொந்தக்காரர்கள் தொழிலாளர்கள். அனைத்து துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் இப்போதைய கொரோனாவால் ஏற்பட்டுள்ள சோதனையான காலத்தில் இருந்து விரைவில் மீண்டு வாழ்வில் உயர வேண்டும்.  

திருமாவளவன்(விடுதலை சிறுத்தைகள் கட்சி): கொரோனா நோய்த்தொற்றுப் பிரச்னையைக் காரணமாகக் காட்டி தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. பன்னெடுங்காலப் போராட்டத்தின் விளைவாக ஈட்டிய அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க மே நாளில் உறுதி ஏற்போம்.  

டிடிவி.தினகரன் (அமமுக):  ‘உழைப்புதான் இந்த உலகை வாழ்விக்கிற சக்தி’ என்பதை நிரூபிக்கும் உழைப்பாளிகள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சரத்குமார் (சமக): தற்போதைய ஊரடங்கு உத்தரவால் உழைப்பாளிகளுக்கு தற்காலிக ஓய்வு கிடைத்திருக்கிறது. அதனால், உழைப்பின் பலனாய் கிடைக்கும் வியர்வைத்துளியினையும், மன நிம்மதியையும், ஈட்டும் பொருளையும் அவர்கள் இழந்துள்ளனர். நிரந்தர வருவாயின்றி வறுமையில் வாடும் அமைப்புசாரா உடல் உழைப்பு தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எல்.முருகன் (பாஜ):  உழைப்பையும் சுய தொழில் முனைவையும் மூலதனமாகக் கொண்ட பல கோடிக் கணக்கான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்றுநோய் மாபெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது. உழைப்பையே மூலதனமாகக் கொண்ட நமது தொழிலாளர்கள் அந்த மாபெரும் சவாலை ஏற்று நோய் தொற்று காலம் முடிவடைந்த பின்னர் புதிய தொழில்களிலும் பங்கு கொண்டும் வெற்றி பெறுவார்கள் என்பது திண்ணம்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர், ெபாதுச் ெசயலாளர்) : கொரோனா வைரஸ் முற்றிலுமாக அழிவதற்கு ஒன்றிணைந்து போராடவேண்டும். இந்த மே தினத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சூளுரை ஏற்போம். ரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது மே தின வாழ்த்துக்கள். இதேபோன்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள்(குலாலர்) சங்க தலைவர் சேம.நாராயணன் உள்ளிட்டவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.   


Tags : leaders ,Celebration ,Chief Minister ,Governor ,May Day Celebration , Today is May Day, Governor, CM
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...