×

40 நாளுக்கு முன் மதுவுக்காக குடிமகன் கடன் வாங்கிய நிலையில் தமிழக அரசுக்கு வரி செலுத்த வங்கியிடம் 1,050 கோடி கடன் பெற்றது டாஸ்மாக்

சென்னை: ஊரடங்குக்கு முன்பு வரை சொந்த பணத்திலோ, கடன் வாங்கியோ டாஸ்மாக்கில் மதுவை குடிமகன்கள் குடித்த நிலை மாறி, தற்போது டாஸ்மாக் நிர்வாகமே தமிழக அரசுக்கு வரி செலுத்த வங்கியில் ரூ.1,050 கோடி கடன் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 24 முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகளை தவிர ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், டாஸ்மாக் கடைகள், பார்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டுள்ளன. இதில் தமிழக அரசுக்கு வருவாயை வாரி குவிக்கும் பொன்முட்டையிடும் வாத்தான டாஸ்மாக் மதுக்கடைகளும் அடங்கும்.

மார்ச் 24ம் தேதிக்கு முன்புவரை வாங்கி கூலியை அப்படியே டாஸ்மாக்கில் கொடுத்து மதுவாங்கி மனைவியின் பணத்தில் சாப்பிட்ட குடிமகன்களும் கடன் வாங்கி மது குடிக்கும் நிலையில் குடிப்பவர்களை டாஸ்மாக் வைத்திருந்தது. ஆனால் ஊரடங்கு அப்படி பணத்தை குவித்த டாஸ்மாக் நிர்வாகத்ைதயே ஆட்டி படைத்துள்ளது. அதாவது, ஊரடங்கு அமலாவதற்கு முதல் நாள் வரை தமிழகத்தில் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகள் மூலம் நாள்தோறும் ரூ.90 முதல் ரூ.120 கோடி வரையில் தமிழக அரசுக்கு வருவாய் கிடைத்தது. ஆண்டிற்கு ரூ. 29 ஆயிரம் கோடி முதல் ரூ.31 ஆயிரம் கோடி வரையில் வருவாய் ஈட்டித்தரும் துறையாக டாஸ்மாக் இருந்தது. ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள்  மூடப்பட்டுள்ளதால் டாஸ்மாக் வருவாய் பூஜ்ஜியத்துக்கு சென்றது.

இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் தமிழக அரசுக்கு செலுத்தவேண்டிய வாட் வரியை செலுத்த  இந்தியன் வங்கியிடம் 1,050 கோடி கடன் பெற்று அதை தமிழக அரசுக்கு கொடுத்துள்ளது.  தமிழக அரசுக்கு அனைத்து வகைகளிலும் வருவாய் ஈட்டித்தரும் டாஸ்மாக் ரூ.1050 கோடியை கடனாகப் பெற்று தமிழக அரசுக்கு வரி செலுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: இது வழக்கமாக நடக்கும் நடைமுறை தான். குறிப்பிட்ட பொதுத்துறை வங்கியிடமிருந்து நிர்வாகம் கடனைப் பெற்று அதை ஒரு மாத காலத்திற்குள் செலுத்தும். தற்போது ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது.

எனவே வாங்கியுள்ள கடனை செலுத்த கூடுதல் அவகாசம் வங்கியிடம் கோரப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கடன் வாங்குவதும் அதை மறுபடியும் செலுத்துவதும் நடைமுறையில் உள்ளது தான். கடந்த 7 ஆண்டுகளாகவே கடன் பெற்று அது திருப்பி செலுத்தப்பட்டு வருகிறது.  இவ்வாறு கூறினர். ஆனால் தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், உடனடியாக வாட் வரியை டாஸ்மாக் நிர்வாகம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.



Tags : Tasmak ,government ,citizen ,bank ,Tamil Nadu ,state government , Alcohol, Citizen, Debt, Task, Curfew
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!