×

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் ஒட்டுமொத்த தளர்வு கூடாது: முதல்வரிடம் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை

சென்னை:  கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாக தான் தளர்த்த முடியும். ஒட்டுமொத்த ஊரடங்கு தளர்வு சாத்தியமில்லை என்று முதல்வர் எடப்பாடி உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு டாக்டர் பிரதீபா கவுர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூடப்பட்டன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் 19 மருத்துவ நிபுணர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் கொரோனாவை கட்டுப்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கி வருகின்றனர். அவர்களின் ஆலோசனையின் பேரில், தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஊரடங்கு உத்தரவை முறையாக கடைபிடிக்காதது தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதில், மாநகர் பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநகர் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகர் பகுதிகளில் கடந்த 26ம் தேதி முதல் 29ம் தேதி முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதே போன்று கொரோனாபாதிப்பு அதிகம் உள்ள தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இந்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் படிப்படியாக தளர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 19 மருத்துவ நிபுணர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை 3 மணிக்கு நடந்தது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகம் உள்ளதால், அங்கு கட்டுப்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது மாநகர் பகுதிகளில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்கலாமா என்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடியுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, கிராமம், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் கொரோனா கட்டுக்குள் வந்திருப்பதால் அந்த பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தலாமா என்பது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்பேரில் தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த மருத்துவ நிபுணர்கள் முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளனர். இது குறித்து மருத்துவர் பிரதீபா கவுர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து முதல்வர் எடப்பாடியுடன் ஆலோசனை நடத்தினோம். கடந்த 3 வாரத்தில் கொரோனா பரிசோதனை செய்வது அதிகரித்துள்ளது. பரிசோதனை செய்வது அதிகரித்துள்ளதால் கொரோனா பாதிப்பு நோயாளிகள் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் யாரிடம் இருந்து பரவுகிறது என்பதை தொடர்ந்து கண்டறிய வேண்டும்.  கொரோனா பாதிப்பு எல்லா மாவட்ட பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இல்லை. பெரும்பாலான மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது. அதனால், எல்லா இடத்தில் நிலைமை சமமாக இல்லை. எனவே தான் தமிழகத்தில் ஒரே நேரத்தில் ஊடரங்கை தளர்த்த முடியாது. ஊரடங்கை முழுமையாக தளர்த்தும் அளவுக்கு நிலைமை இப்போதைக்கு இல்லை.
கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் வாழக்கை முறையில் மாற்றம் தேவை. இந்த வைரஸ் நம்முடன் கொஞ்ச நாள் மட்டும் இருக்க போவதில்லை. நீண்ட காலம் இருக்க போகிறது. எனவே, தொடர்ந்து இனிவரும் நாட்களில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவுவது, பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். மக்கள் கூட்டமாக கூடுவதை நாம் அனுமதிக்கக் கூடாது.

தீவிர நோய் பாதிப்பில் உள்ளவர்களை கவனத்துடன் பார்த்து கொள்ள வேண்டும். நீரிழிவு, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய் பாதிப்பு உள்ளவர்கள் அதற்கான சிகிச்சையை எடுக்க வேண்டும். அப்போது தான் ெகாரோனா பாதிப்பில் இருந்து தடுக்க முடியும். கொரோனாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை தொடரத்தான் வேண்டி இருக்கும். சூழ்நிலைகளை கண்காணித்து அதற்கேற்ப ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக அரசு தான் முடிவு செய்ய வேண்டும். எல்லோரும் சேர்ந்து தான் கொரோனா வைரஸை விரட்ட முடியம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், நாளை மாலை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில், மருத்துவ நிபுணர்கள் குழு வைத்துள்ள பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தப்படுவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : experts ,Tamil Nadu , Tamil Nadu, Corona, Medical Experts
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...