×

கொரோனா பாதித்த பகுதியில் சீல் வைக்கப்பட்ட சாலை வழியாக அத்துமீறி சென்ற வாகன ஓட்டிகள்

பெரம்பூர்: கொரோனா  பாதிப்பு வட சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ராயபுரம், புளியந்தோப்பு, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் நோய் தொற்று அதிகளவில் உள்ளதால் அந்த பகுதியில் பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக அமலில் இருந்த முழு ஊரடங்கு நேற்று முடிவுக்கு வந்ததால், பொதுமக்கள் வழக்கம்போல் நேற்று இருசக்கர வாகனத்தில் வலம் வர ஆரம்பித்தனர்.
தற்போது, முல்லை நகர் மற்றும் சத்தியமூர்த்தி நகர் எல்லைகள், மகாகவி பாரதி நகர் மேம்பாலம் மூடப்பட்டதால், அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேசின்பிரிட்ஜ் முன்பகுதியில் சத்தியமூர்த்தி நகர் சந்திப்பு பகுதியில் போலீசார் பேரிகார்டு வைத்து சாலையை மூடி இருந்தனர்.  

நேற்று அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அனைவரையும் திரும்பி போகும்படி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்ஐ கூறினார். ஆனால், அவர்கள் திரும்பி செல்ல மறுத்து, எஸ்ஐயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது எஸ்ஐ, ‘‘இந்த பகுதியில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த சாலையை மூடி வைத்துள்ளோம். இவ்வழியே செல்ல கூடாது,’’ என்றார். ஆனால், இதை ஏற்க மறுத்த வாகன ஓட்டிகள், எஸ்ஐயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு, அவர் ஒருவர் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருந்ததால், வாகன ஓட்டிகள் அவரது பேச்சை மீறி, தடுப்புகளை அகற்றி அவ்வழியே சென்றனர்.

இதேபோல், வியாசர்பாடி பாரதி நகர், கொடுங்கையூர் என பல பகுதிகளிலும் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே, மேற்கண்ட பகுதிகளில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் நியமிக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தீயணைப்பு நிலையத்துக்கு சீல் :
மணலி தீயணைப்பு நிலைய தலைமை எழுத்தர் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கொரோனா இருப்பது உறுதியானதால் அவரை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர், தீயணைப்பு நிலையம் பின்புறம் உள்ள தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பில், இன்னொரு தீயணைப்பு வீரருடன் தங்கி இருந்ததால், அவருக்கும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து மணலி தீயணைப்பு நிலையம் மற்றும் தீயணைப்பு அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவை நேற்று சீல் வைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளது.



Tags : Motorists ,area ,road ,Corona , Corona, Seal, Motorists
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...