×

கொரோனாவால் ரகசியமாக நடக்கும் அவலம்; குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர்: ஊரடங்கு உத்தரவால் உறவினர்களுக்கும் அழைப்பு விடுக்காமல், இருவீட்டார் ஏற்பாட்டில் குழந்தை திருமணங்கள் அதிகளவு நடக்கிறது. இதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சிறு வயதிலேயே திருமணம் செய்வதால் பெண்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க கடந்த 2006ம் ஆண்டு குழந்தை திருமண தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் குழந்தை திருமணங்கள் அதிகரித்து கொண்டேதான் உள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவாமல் தடுக்க தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், உறவினர்களுக்கும் அழைப்பு விடுக்காமல் குழந்தை திருமணங்கள் ரகசியமாக அதிகளவில் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

காட்பாடி அடுத்த கரசமங்கலத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரியின் மகளான 16 வயது பிளஸ்1 மாணவிக்கும், அதே பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து ‘1098’ என்ற சைல்டு லைன் எண்ணில் வந்த புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று விசாரணை நடத்தி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘குழந்தை திருமணங்கள் சட்டப்படி குற்றம். ஆனால், ஒரு சிலர் பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை என்று கூறி 18 வயதுக்குள் திருமணம் செய்கின்றனர். இதனால், அந்த பெண்ணின் கல்வி மட்டுமின்றி எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடுகிறது.

எனவே, குழந்தை திருமணம் நடக்காமல் தடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழந்தை திருமணங்கள் தடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை. மேலும் குழந்தை திருமணங்களில் இருந்து மீட்கப்பட்ட சிறுமிகளை குறிப்பிட்ட வயது நிறைவடையும் வரை தொடர்ந்து கண்காணிக்க தவறி விடுகின்றனர். அதேபோல் சிறுமிகள் காதலித்து வீட்டைவிட்டு வெளியேறிவிட்டால், சம்பந்தப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டியது அவசியம். கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையில் சிறுமிகள் திருமணத்துக்கு பிறகு குறிப்பிட்ட வயதை அடைந்தாலும், திருமணம் செய்த நபரின் மீது சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

இதுபோன்ற நடவடிக்கைகளில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புகார் கொடுக்காததால், வழக்கு பதிவு செய்யாமல் போலீசாரும் விட்டுவிடுகின்றனர். பெரும்பாலும் சிறுமிகள் திருமணம் குறித்து உறவினர்களும், சிறுமிகளின் தோழிகளும்தான் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போது கொரோனா பரவாமல் தடுக்க திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு குறைந்தளவு நபர்களை மட்டுமே அழைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இருவீட்டார் மட்டும் பங்கேற்று, ரகசியமாக குழந்தை திருமணங்கள் செய்கின்றனர். குறிப்பாக கிராமங்களில்தான் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக உள்ளது.

கடந்த வாரம் அணைக்கட்டு தாலுகாவில் கொரோனாவால் உலகம் அழியப்போகிறது என்று கூறி 15 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 2 நாட்களுக்கு பிறகுதான் அதிகாரிகள் விசாரணை தொடங்கியது. எனவே, ஊரடங்கு நாளில் கிராமப்புறங்களில் சென்று அதிகாரிகள் குழந்தை திருமணங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோல் பள்ளி மாணவிகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். ஒரு பெண்ணுக்கு கல்வி கொடுத்தால், குடும்பத்துக்கு கல்வி கொடுப்பதற்கு சமம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : affair ,Corona , Corona, child marriages, increase
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம்:...