×

27 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலைமை மோசம்; கொரோனாவால் நாட்டின் வறுமை இரட்டிப்பாகும்: 6 மாதங்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கினால்தான் தீர்வு

புதுடெல்லி: நாட்டில் மொத்தமுள்ள 35 மாநில, யூனியன் பிரதேசங்களில் 27 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தாக்கத்தால் நிலைமை மோசமாக உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வறுமை இரட்டிப்பாகும் என்பதால், வருகிற 6 மாதங்களுக்கு தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கினால்தான் தீர்வு கிடைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஏப். 25ம் தேதி தொடங்கி வருகிற மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மக்கள் வேலைவாய்ப்பின்றி பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன், ஐ.நா-வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, கொரோனா காரணமாக இந்தியாவின் முறைசாரா துறையைச் (புலம்பெயர்ந்தோர் உட்பட அமைப்புசாரா தொழிலாளர்கள்) சேர்ந்த சுமார் 40 கோடி தொழிலாளர்கள் வறுமையில் தள்ளப்படக்கூடும் என்று கூறியது.

கொரோனா ஒட்டுமொத்த உலகையும் புரட்டி போட்டிருக்கும் நிலையில் இந்திய தொழிலாளர்களின் நிலைமை மோசமடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வறுமையின் பாதிப்பு எந்தளவிற்கு இருக்கும் என்பது குறித்து தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு (என்எஸ்எஸ்ஓ) மற்றும் திட்ட ஆணையத் தரவைப் பயன்படுத்தி சில தகவல்கள் வெளியாகி உள்ளன. என்.எஸ்.எஸ்.ஓ, அதன் இருபது ஆண்டு நுகர்வு செலவு ஆய்வுகள் மூலம், வீடுகளின் மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவு (எம்.பி.சி.இ) மதிப்பீடுகளை முன்வைக்கிறது. இதனை வைத்தே நாட்டின் வறுமையின் நிலைகள் மதிப்பிடப்படுகின்றன. அதன்படி, 2011-12ம் ஆண்டின் புள்ளி விபரப்படி (2017-18 என்எஸ்எஸ்ஓ ஆய்வு அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை) நாடு முழுவதும் சுமார் 27 கோடி ஏழை மக்கள் உள்ளனர். அதாவது 21.9% மக்கள் உள்ளனர். 2019-20ம் ஆண்டிற்கான மக்கள்தொகை தரவைப் பயன்படுத்தி,

தற்போதைய கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு விதமான வருமான முறைகள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக, அனைத்து தனிநபர்களும் ஒரு மாத வருவாயை இழக்கின்றனர். இது சராசரி எம்பிசிஇ-ல் சுமார் 8.3% இழப்பைக் குறிக்கிறது. இரண்டாவதாக, தனிநபர்கள் தங்களது மூன்று மாதங்களுக்கு வருமான இழப்பை சந்திப்பார்கள். இது, சராசரி எம்பிசிஇ-ல் சுமார் 25% இழப்பைக் குறிக்கிறது. உதாரணத்துக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் 2011-12ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மாநிலத்தின் வறுமை விகிதம் 29.4% என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய கணக்கெடுப்பின்படி வறுமை விகிதம் 57.7% ஆக அதிகரிக்கக் கூடும். இதனால், ​சுமார் 7.1 கோடி ஏழை மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள்.

இதேபோல் எல்லா மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கணக்கிட்டால் இந்தியாவின் ஒட்டுமொத்த வறுமை விகிதம் 46.3% ஆக உயர்கிறது. அதாவது, 2011-12ம் ஆண்டு அளவை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். ஆய்வு செய்யப்பட்ட 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 27 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் வறுமை குறியீடு இரட்டிப்பாகிறது. உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மேற்குவங்கம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் 35.4 கோடிக்கும் அதிகமானோர் இருப்பர். முறைசாரா துறையில் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் (ஏற்கனவே ஏழைகள் அல்லது விளிம்பு நிலையில் உள்ளவர்கள்) மிக மோசமான பாதிப்புக்கு ஆளாவார்கள் என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. கொரோனாவின் தாக்கம் முடிந்து, அடுத்து வரும் 3 மாதங்களில் வருமான நிலைகள் மற்றும் பொருளாதாரம் எவ்வாறு மீண்டு வருகிறது? இழந்த வேலை எவ்வாறு மீண்டும் உருவாக்கப்படும்?

எதன் அடிப்படையில் அவை தீர்மானிக்கப்படும் என்பதிலும் பல குழப்பங்கள் நீடிக்கிறது. இதற்கிடையே, வறுமையில் உள்ள ஒரு நபருக்கு மாதத்திற்கு சுமார் 750 ரூபாயை மத்திய அரசால் வழங்க முடியும் என்றால், தொற்றுநோயால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளில் இருந்து ஏழைகளை ஓரளவு மீட்க முடியும். இதனால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாதம் ரூ.46,800 கோடி கூடுதல் செலவாகும். அடுத்த ஆறு மாதங்களுக்கு மக்களுக்கான நிவாரண உதவித் தொகை, ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கல், காஸ் சிலிண்டர்களுக்கு மானியம் போன்ற பிற சலுகைகளுக்கு கூடுதலாக வழங்க வேண்டும்.

கொரோனா தொற்றுநோய், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதால், நாட்டின் நிச்சயமற்ற பாதையை கருத்தில் கொண்டு, ஏழைகளுக்கான திட்டங்களை புதியதாக வகுக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மேற்குவங்கம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் 35.4 கோடிக்கும் அதிகமானோர் வறுமையின் பிடியில் சிக்குவர்.

Tags : State ,country ,Union Territories ,Corona , Corona, the country's poverty, is doubled
× RELATED ஒரு விரல் புரட்சியே… மக்களவைத்...