×

அரசியல் சுயலாபத்திற்காக போராடி பெற்ற உரிமையை குழிதோண்டி புதைக்கிறது; காவிரி ஆணையம் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து டெல்டா விவசாயிகள் நகல் எரிப்பு போராட்டம்

தஞ்சை: காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் மத்திய அரசு முயற்சியை தடுத்து நிறுத்த தமிழக முதல்வர் சட்டபேரவையையும், அமைச்சரவையும் உடனே கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். காவிரி விவகாரத்தில் நான்கு மாநிலத்தின் நதி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் விதமாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்குமாறு 2018 பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி அதற்கான அரசாணையையும் வெளியிட்டது. இதை தொடர்ந்து காவிரி ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு என இரண்டாக பிரித்து தனித்தனியாக 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மத்திய நீர் வள அமைச்சகம் தரப்பில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. காவிரி நீர் மேலாண்ைம ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் இணைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரம் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டது. இதில், மத்திய அரசு கூட தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆணையத்தின் முழு அதிகாரமும் அதன் தலைவருக்கே உண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையத்தை இணைத்துள்ளதால் மாநிலங்களின் கோரிக்கை அனைத்தும் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. இது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், மக்கள் மத்தியில் கடும் கொத்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்திட்டம் தமிழகத்தின் காவிரி நதிநீர் உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற செயல்.

இதை மத்திய அரசின் அரசிதழ் திரும்ப பெறாவிடில் அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாய பேரமைப்புகளையும் சேர்நத்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும், தமிழக முதல்வர் பழனிசாமி உடனடியாக தமிழக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், மத்திய அரசின் அறிவிப்புக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள், தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வருவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுகுறிதது மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, காவிரி நதிநீரை நம்பியிருக்கும் விவசாயிகளின் நலன்களுக்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள், கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்மத்திய அரசை கண்டித்து இன்று காலை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகள் சார்பில் மத்திய அரசின் அரசாணை நகல் தீயிட்டு எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன் சு.செந்தில்குமார், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் எஸ்.மனோகரன் உடன் பங்கேற்றார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்: காவிரியில் தமிழக உரிமை மீட்பதற்கு 50 ஆண்டுகால போராட்டத்தின் மூலம் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ்க மக்கள் ஒன்றுப்பட்டு நடத்திய தீவிர போராட்டத்தையடுத்து தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி நீர் பங்கீற்று ஒழுங்காற்றுக்குமுவையும் 2018ல் அமைத்தது. ஆனால் ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் இது நாள் வரை நியமிக்கப்படவில்லை. காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு கூட்டம் மட்டும் பெயரளவில் சடங்கு கூட்டமாகவே நடைபெற்று வருவது ஏமாற்றமளிக்கிறது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுவரப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை ஆரம்பம் முதல் தொடர்ந்து எதிர்த்து வரும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு துணை போகும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வரும் நிலையில் தற்போது அதனை முடக்கும் மறைமுக நடவடிக்கையாக இவ்வாணையை பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் வஞ்சக நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். கெரோனா நோய் தாக்குதலில் உலகம் முடங்கி உள்ள நிலையில், அவசர அவசரமாக தனது அரசியல் சுயலாபத்திற்காக தமிழகம் போராடி பெற்ற உரிமையை குழி தோண்டி புதைக்க நினைக்கிறது.

சட்ட விரோதமாக கர்நாடகாவின் நயவஞ்சக நடவடிக்கைக்கு மத்திய அரசு துணை போவதற்கு குடியரசு தலைவர் அனுமதியளித்திருப்பது வேதனையளிக்கிறது. எனவே, தமிழக விவசாயாகளின் நலன் கருதி அரசாணையை திரும்ப பெறுவதோடு, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு புதிய தலைவரை நியமனம் செய்து தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட குடியரசு தலைவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் நிறுவன தலைவர் லெனின்: ஏறத்தாழ 43 ஆண்டுகாலமாக உச்ச நீதிமன்றத்தில் போராடியது மட்டுமல்லாமல், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 2 மாபெரும் மனிதச் சங்கிலிகளை நடத்தியும் மத்திய அரசு செவி சாய்க்காத நிலையில் உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியமும், ஓழுங்காற்றுக்குழுவும் அமைக்க வழிகாட்டி தீர்ப்பு வழங்கியது. அதை பாஜ அரசு மதிக்கவே இல்லை.

உலகின் கவனமோ கொரோனா பக்கம் இருக்கும் இன்றைய சூழலில் வெந்த புன்னில் வேல் பாய்ச்சும் வேலையை மத்திய அரசு செய்திருக்கிறது. இந்தச் செயல் சட்ட விரோதமானது. சந்து பொந்து பார்த்து சவாரி செய்யும் வேலையை மோடி அரசு கைவிட வேண்டும். இல்லையேல் தமிழக மக்கள் மத்திய அரசின் முடிவுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள். காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தபோது அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காவிரி மக்களால் அளிக்கப்பட்ட “காவிரி காப்பாளர்” என்ற விருதைப் பெற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு, அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி ஜல்சக்தித் துறையின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையத்தை கொண்டு வரும் முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிடக் கோரி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Tags : fight ,Cauvery Commission ,Delta , Cauvery Commission, Central Government, Delta Farmers, Copywriting Struggle
× RELATED உள்ளாட்சி தேர்தலில் தில்லுமுல்லு;...