×

தமிழர்களின் நலனுக்காக நடவடிக்கை; வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப புதிய இணையதளம் உருவாக்கம்...தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டதால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தவித்து வரும் வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது.  இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா பிறப்பித்த உத்தரவில், ஊரடங்கால் புலம்பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் பிற நபர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில்   சிக்கியுள்ளனர். அவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

அவர்களை உரிய அறிவுறுத்தல்களுடன் சொந்த மாநில அரசுகள் அழைத்துக் கொள்ளலாம். தொழிலாளர்கள் தங்கியிருக்கும் மாநிலங்கள் மற்றும் அவர்களது சொந்த மாநிலங்கள் என இரு மாநில அரசுகளும் பரஸ்பர ஒப்புதலுடனேயே சாலை   மார்க்கமாக அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களை உரிய பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். வைரஸ் அறிகுறியற்றவர்களை மட்டுமே இடம் பெயர அனுமதிக்க வேண்டும். குழுக்களாக செல்வதற்கு பேருந்துகளை பயன்படுத்தலாம்.   பேருந்துகள் முழுமையாக கிருமி நாசினிகளை கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.

அதேபோல், இருக்கையில் உரிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இடம்பெயரும் நபர்கள் தங்கள் இருப்பிடங்களை அடைந்தவுடன், உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். வீட்டுக்குள் தனிமைப்படுத்திக்   கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை கவனிக்க அந்தந்த மாநில அரசுகள் உயர் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். இடம் பெற்ற நபர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கிடையே,   வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல பல மாநிலங்கள் சிறப்பு ரயில்கள் இயக்ககோரி மத்திய அரசிடம் கோரியுள்ளன. இதற்காக ஒரு நாளைக்கு 400 சிறப்பு ரயில்களை இயக்கும் திட்டத்தை ரயில்வே  அமைச்சகம் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வெளி மாநிலங்களில் உள்ள தமிழக மக்களை சொந்த ஊருக்கு அழைத்து வர புதிய இணைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,  இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காகதேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு 25.03.2020 முதல் அமலில் இருந்து வருகிறது. இதனால், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நம் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களில், உடனடியாக தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்புகிறவர்களின் நலனுக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின் நலனை காத்திடும் நோக்கிலும், அவர்களது எண்ணிக்கையினை அறியும் வகையிலும், தமிழ்நாட்டிற்குத்
திரும்புகிறவர்களுக்கு தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும், அவர்களைப் பற்றிய தகவல்களை பெறுவதற்காக இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள்
nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் பதிவுகள் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamils ,Tamilnadu Government Announcement , Tamils Abroad Home www.nonresidenttamil.org Sign Up .. Tamilnadu Government Announcement
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!