×

மணிமுத்தாறு அருகே ஆட்டை கடித்து குதறியது சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

அம்பை: மணிமுத்தாறு அருகே அரசு ரெவின்யூ பொத்தையில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை கடித்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வன உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது. இப்பகுதியில் உள்ள மலையடிவார கிராமங்களில், சிறுத்தை புகுந்து வீட்டில் வளர்க்கப்படும் நாய், ஆடுகள் போன்ற கால்நடைகளை தூக்கி செல்வதும், யானை, கரடி, பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பீதியுடனே வாழ்கின்றனர். மணிமுத்தாறு அணைக்கும், ஜமீன் சிங்கம்பட்டி கிராமத்திற்கும் நடுவே விவசாய நிலங்களின் மைய பகுதியில் 25 ஏக்கரில் ஒட்டுக்கல் பொத்தை என்ற அரசு புறம்போக்கு குன்று உள்ளது. தற்போது விவசாயம் இல்லாததால், இங்கு சிங்கம்பட்டி, மணிமுத்தாறு சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் மணிமுத்தாறை சேர்ந்த கிருஷ்ணன்(42) தனது ஆடுகளை பொத்தையில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது ஆடுகள் கலைவதை கண்ட அவர் ஓடிச்சென்று பார்த்த போது சிறுத்தை ஒரு ஆட்டை கவ்விக் கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், கையில் இருந்த தடியுடன் ஆவேசமாக சப்தம் போட்டுள்ளார். உடனே சிறுத்தை ஆட்டை விட்டுவிட்டு ஓடியது. சம்பவம் குறித்து அவர் கூறுகையில், நேற்று முன்தினம் மணிமுத்தாறில் ஒட்டுக்கல் பொத்தை அருகேயுள்ள எனது வயலுக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றேன். அப்போது ஆடுகள் கலைந்து ஓடின. நான் பார்த்தபோது சிறுத்தை, ஒரு ஆட்டை கவ்வியதை பார்த்து சப்தம் போட்டு ஓடியதும் சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டது. கடிபட்ட ஆடு உயிர் பிழைப்பது அரிது. எனவே உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என்றார். தகவலறிந்த அம்பை வன அதிகாரிகள் வந்து கடிபட்ட ஆட்டையும், சம்பவ இடத்தையும் பார்வையிட்டனர். பின்னர் ஒட்டுக்கல் பொத்தையில் சிறுத்தை நடமாட்டத்தை அறிய தானியங்கி கேமராக்கள் பொருத்தினர். இப்பகுதியில் விவசாய பணிகள் துவங்கும் போது பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள்,  பொத்தை அருகே தங்கி வேலை செய்வது வழக்கம். எனவே இங்கு பதுங்கியுள்ள சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது

கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட சிவசைலம் பகுதியில் கடந்த சில நாட்களாக கரடிகள் கூட்டமாக புகுந்து பழ மரங்கள், வாழை உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி வந்தன. இரவு நேரத்தில் வீடுகளுக்குள் நுழைவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். கள இயக்குநர் கயாரத் மோகன்தாஸ் உத்தரவின் பேரில் அம்பை துணை இயக்குநர் (பொறுப்பு) கணேஷ் அறிவுறுத்தலின் பேரில் கரடியை பிடிக்க பங்களாக்குடியிருப்பு பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். இதில் நேற்று அதிகாலை 5 மணியளவில் 12 வயது ஆண் கரடி சிக்கியது.

கூண்டில் சிக்கிய கரடியை வனக்கால்நடை மருத்துவர் மனோகரன், கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் முத்துக்கிருஷ்ணன், சிவமுத்து, கால்நடை மருத்துவ ஆய்வாளர் அர்னால்ட் ஆகியோர் சோதனை செய்தனர். இதையடுத்து பிடிபட்ட கரடியை துணை இயக்குநர் (பொ) கணேஷ் தலைமையில் வனச்சரகர் கடையம் நெல்லைநாயகம், முண்டந்துறை சரவணகுமார், வனவர் முருகசாமி, வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டைத்தடுப்புக் காவலர்கள் முண்டந்துறை வனச்சரகத்திற்கு உட்பட்ட கொடமாடி வனப்பகுதியில் கொண்டு விட்டனர். மேலும் அப்பகுதியில் சுற்றித் திரியும் கரடிகளைப் பிடிக்க சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் கூண்டு வைத்துள்ளனர்.

Tags : bell , Leopard , goat, bell, urging , farmers,cage
× RELATED திருவெறும்பூர் அருகே வீட்டில் அழுகிய...