×

ஊரடங்கால் உதவி செய்ய ஆளில்லை முதுகில் கட்டியுடன் உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: வறுமையால் ஆபரேஷன் செய்ய முடியாத சோகம்

மானாமதுரை:  பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையின் முதுகில் உள்ள கட்டியை அகற்ற உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அழகர்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (30). சலவை தொழிலாளி. இவரது மனைவி அங்காளபரமேஸ்வரி. 2 பெண் குழந்தைகள் உள்ளன. மீண்டும் கர்ப்பமான அங்காளபரமேஸ்வரிக்கு கடந்த 21ம் தேதி மானாமதுரை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் போதே முதுகில் இரண்டு இன்ச் அளவிற்கு ஒரு கட்டி இருந்தது.  டாக்டர்கள் பரிந்துரையின்பேரில், 22ம் தேதி மாலை மதுரை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு 5 நாட்கள் குழந்தையை மருத்துவர்கள் கண்காணிப்பில் வைத்திருந்தனர். 27ம் தேதி மதுரையில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கட்டியை ஆபரேசன் செய்து அகற்ற ரூ.2 லட்சம் வரை செலவாகும் என்றனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஆபரேஷன் செய்ய போதிய பண வசதி இல்லாததால் குழந்தையை தூக்கிக் கொண்டு மீண்டும் மானாமதுரைக்கு வந்துவிட்டனர்.

தற்போது குழந்தை முதுகில் உள்ள கட்டி நாளுக்குநாள் பெரிதாகிக் கொண்டே வருகிறது. இதனால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து என்று கூறப்படுகிறது. எனவே குழந்தையை காப்பாற்ற தமிழக அரசு உதவ வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்காளபரமேஸ்வரி கூறுகையில், ‘‘சலவை தொழிலாளியான எனது கணவர் பலரிடம் பணம் கேட்டும் ஊரடங்கு சமயத்தில் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. குழந்தையை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும்’’ என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார். உதவி செய்ய விரும்புவோர் குழந்தையின் தந்தை முத்துப்பாண்டியை 99949 27703  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Tags : baby ,Baby Who Struggles , baby , struggles,back injury, tragedy , poverty
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…