×

மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் மொத்த காய்கறி மார்க்கெட் : கலெக்டர் - வியாபாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மதுரை:  மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுக்கு மொத்த காய்கறி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டு, நேற்றிரவு முதல் செயல்படத் துவங்கியது. வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன், கலெக்டர் வினய் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு ஏற்பட்டது.  கொரோனா பரவலை தடுக்க, கடந்த 24ம் தேதி முதல், இரவு 1 மணி முதல் காலை 6 மணி வரை மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் இயங்க அனுமதிக்கப்பட்டது. மேலும் நிபந்தனையுடன் மொத்த வியாபாரிகள் மட்டுமே காய்கறி விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை எனக்கூறி, ரேஸ்கோர்ஸ், விவசாய கல்லூரி, யாதவர் கல்லூரி, மன்னர் கல்லூரி ஆகிய 4 இடங்களில் காய்கறி கடைகளை இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 25ம் தேதி முதல் கடைகளை வியாபாரிகள் திறக்கவில்லை. இதனால், பொதுமக்களுக்கு காய்கறிகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதனையடுத்து ரிங்ரோட்டில் அம்மா திடலுக்கு தற்காலிகமாக மார்க்கெட்டை மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையொட்டி நேற்று முன்தினம் கலெக்டர் டி.ஜி.வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன் ஆகியோர் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. ஆனால் அதற்கு பதிலாக மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரினர்.

இது தொடர்பாக நேற்று பகல் 12 மணியளவில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன், கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன், மாநகர் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டை, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்டுக்கு இடமாற்றம் செய்து, கடைகள் ஒதுக்கீடு செய்வது முடிவானது.
இதுகுறித்து மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறிகள் மார்க்கெட் சங்கத்தலைவர் பி.எஸ்.முருகன் கூறும்போது, “சென்ட்ரல் காய்கறிகள் மார்க்கெட்டை, வெவ்வேறு இடங்களில் பிரித்து மாற்றப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அந்த இடங்களுக்கு காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்தால், அத்தியாவசிய தேவையான கழிப்பறை, தண்ணீர் வசதி உள்ளிட்ட வசதிகள் கிடைக்காது என இடமாற்றம் செய்ய நாங்கள் உடன்படவில்லை. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் 200 கடைகள் ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டோம். ஆனால், 150 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு கடைக்கும் 5 மீட்டர் இடைவெளியில் கடைகளை மாநகராட்சி ஒதுக்கி உள்ளது. இதற்காக மாநகராட்சி சார்பில் மார்க் இடப்பட்டுள்ளது. சில்லரை கடைகளுக்கு ரேஸ்கோர்சில் இடம் ஒதுக்கித் தருவதாக உறுதியளித்துள்ளனர்” என்றார். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் 200 கடைகள் ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டோம். ஆனால், 150 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு கடைக்கும் 5 மீட்டர் இடைவெளியில் கடைகளை மாநகராட்சி ஒதுக்கி உள்ளது.


Tags : Whole Vegetable Market , Whole Vegetable Market, Beef Stamp,Collector , Merchants Agreement
× RELATED கல்லூரிகளில் வாக்குப்பதிவு...