×

குன்னூர் அருகே பரிதாபம் செல்பி எடுக்க சென்ற கல்லூரி மாணவன் 80 அடி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து பலி: 26 மணி நேர போராட்டத்திற்கு பின் உடல் மீட்பு

குன்னூர்: குன்னூர் அருகே நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க சென்ற கல்லூரி மாணவன் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் 26 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.  நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை பர்லியார் பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன்-சங்கீதா தம்பதியினரின் மகன் அகில் (21). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பயின்று வந்தார். இவரும், சகோதரர் நிகில், அத்தை அஸ்வதி மற்றும் வீட்டின் அருகில் உள்ள அஞ்சலி, அபிதா ஆகியோர் நேற்று முன்தினம் மரப்பாலம் நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்றுள்ளனர். நீர்வீழ்ச்சி அருகே அகில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக 80 அடி உயரத்தில் இருந்து தவறி ஆற்றுக்குள் விழுந்து உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில், குன்னூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், வெலிங்டன் போலீசார், தன்னார்வ அமைப்பினர் சம்பவ இடத்துக்கு சென்று 3 மணி நேரம் அகில் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு ஆனதாலும், யானை நடமாட்டம் காரணமாகவும் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

மீண்டும் நேற்று காலை முதல் மாணவன் உடலை தேடும் பணி துவங்கியது.  மேட்டுப்பாளையத்திலிருந்து பரிசல் கொண்டு வரப்பட்டு அகிலை தேடினர். சுமார் 26 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் மாணவன் அகிலின் உடலை மீட்டனர். சுமார் 2 கி.மீ. தூரம் வனப்பகுதி மற்றும் கரடு முரடான பாதையில் மாணவன் உடலை தீயணைப்புத்துறையினர் சுமந்து சென்று ஆம்புலன்சில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வெலிங்டன் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவை மீறி வனப்பகுதிக்குள் சென்று வாலிபர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : college student ,cellby ,Coonoor , College student, dies , falling , 80-foot waterfall
× RELATED முன்விரோத தகராறில் கல்லூரி மாணவன் படுகொலை: தப்பிய 3 பேருக்கு வலை