×

காலி இடங்களில் வியாபாரம் செய்ய அனுமதிங்க; கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சிறு வியாபாரிகள் போராட்டம்...குழப்பத்தில் அரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏராளமான பொதுமக்கள் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும் வந்து சென்றனர். அவ்வாறு வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மாஸ்க் அணியாமலும் கூட்டம், கூட்டமாக வாங்கி சென்றதன் விளைவாக, கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரி, வந்து சென்ற பொதுமக்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், கோயம்பேடு மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற அரசு திட்டமிட்டது. இது தொடர்பாக நேற்று முன்தினம் சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், சென்னை காவல்துறை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கோயம்பேடு வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கோயம்பேடு மார்க்கெட்டை மாற்றுவது தவிர வேறு வழியில்லை என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டை மாற்ற ஒரு சில வியாபாரிகள் சம்மதம் தெரிவித்தனர். ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், கொரோனாவை கட்டுப்படுத்த கோயம்பேடு மார்க்கெட் தற்காலிகமாக மாற்றப்படும் என்று சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதன்பேரில் இன்று முதல் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் நேரடியாக வரை தடை செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு வணிக வளாகத்தில் தற்போது நடைபெற்று வரும் சில்லறை விற்பனை முழுவதுமாக தடை செய்யப்படுகிறது. சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அந்தெந்த பகுதிகளில் உள்ள 245 திறந்தவெளி மைதானம் மற்றும் பேருந்து நிலையத்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வந்த பூ மார்க்கெட் மற்றும் பழங்கள் அங்காடி நாளை முதல் மாதவரம் பேருந்து நிலையத்தில் மறு அறிவிப்பு வரும் வரை விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் ஏற்றி வரும் வெளி மாநில வாகனங்கள் மற்றும் வெளிமாவட்ட வாகனங்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்களை இறக்கி வைத்த பின் வெளியேற்றப்படும். அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை சென்னையில் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் சில்லறை விற்பனைக்கு காய்கறிகள் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 1500 சிறு வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோயம்பேடு சந்தை அருகில் உள்ள காலி இடங்களில் வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கோரி போராட்டம் நடத்தி ஈடுபட்டுள்ளனர். மாதவரத்தில் சில்லறை வியாபாரம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும், மொத்த வியாபாரிகள் சில்லைறை வியாபாரிகளாக மாறி விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Tags : Empty Small Vendors Struggle In Coimbatore Vegetable Market , Allow Business to Empty Small Vendors Struggle In Coimbatore Vegetable Market
× RELATED உடல் உறுப்பு தானம்.. காப்பீடு மற்றும் 3...