கட்டணம் செலுத்துவதில் பிரச்னை இந்தியாவில் நடக்க இருந்த உலக பாக்சிங் தொடர் ரத்து

புதுடெல்லி: இந்தியாவில் முதல்முறையாக அடுத்த ஆண்டு நடைபெற இருந்த உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை, போட்டிக் கட்டணம் செலுத்தவில்லை என்று  உலக குத்துச்சண்டை அமைப்பு ரத்து செய்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக 2021ம் ஆண்டு   ஆண்களுக்கான  உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுவதாக இருந்தது. அதற்கான பணிகளை இந்திய குத்துச்சண்டை  கூட்டமைப்பு (பிஎப்ஐ) மேற்கொண்டிருந்தது.  அந்த பணிகள் இப்போது கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்  உலக குத்துச்சண்டை அமைப்பு (ஏஐபிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2017ம் ஆண்டு ஒப்பந்தப்படி இந்தியாவில் நடைபெற இருந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, ரத்து செய்யப்படுகிறது. போட்டி நடத்துவதற்கான கட்டணத்தை இந்தியா இதுவரை செலுத்தவில்லை.

அதனால் விதிமுறைகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை 2021ம் ஆண்டு செர்பியா  தலைநகர் பெல்கிரேடில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கூட்டமைப்பு அபராத கட்டணமாக 500 அமெரிக்க டாலர்களை செலுத்த வேண்டும்’ என்று  கூறியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பிஎப்ஐ , ‘உலக குத்துச்சண்டை  அமைப்புக்கான   சுவிஸ் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதனால்  கட்டணத்தை செலுத்த முடியவில்லை . மேலும்  செர்பியாவில் உள்ள  மற்றொரு வங்கி கணக்கு மூலம் ஏற்னவே பண பரிமாற்றங்களை செய்துள்ளோம்.  ஆனால்  செர்பியா இப்போது  இந்தியாவின் கிரே லிஸ்டில் உள்ளதால் அந்த கணக்கிலும் பணம் செலுத்த முடியவில்லை. இந்த பிரச்னைகளை சொல்லியும், அதை சரிசெய்ய ஏஐபிஏ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எங்களிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல் இந்த முடிவை எடுத்துள்ளது. ஏஐபிஏ நடவடிக்கைகள் எங்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் தருகின்றன.  இருப்பினும் அபராதம் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று  தெரிவித்துள்ளது. முதல்முறையாக சர்வதே அளவிலான குத்துச் சண்டை போட்டி இந்தியாவில் நடக்கும் என்ற ஆவலில் இருந்த இந்திய வீரர்கள், ரசிகர்கள் இப்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர். சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (ஐஒசி) ஏற்கனவே  ஏஐபிஏயை இடைநீக்கம் செய்து வைத்துள்ளது. அதனால் தான் அதன் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

 வெளிநாட்டு பணத்தை அங்கீகாரம் இல்லாமல் முதலீடு, சேமிப்பு செய்வது உள்ளிட்ட பண மோசடிகள், தீவிரவாதத்துக்கு பணம் தருதல் உள்ளிட்ட வேலைகளுக்கு ஆதரவாக இருக்கும்  நாடுகளை எச்சரிக்கை செய்ய, சம்பந்தப்பட்ட நாடு கிரே பட்டியலில்  சேர்க்கப்படும். அவர்களுடனான பண பரிமாற்றங்கள் தடை செய்யப்படும். அதன்பிறகும்  அந்த நாடுகள்  மாறாவிட்டால் அவை கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும்.

Related Stories:

>