×

அமெரிக்காவிலிருந்து இரண்டு லட்சம் பேர் வெளியேற்றப்பட வாய்ப்பு: அச்சத்தில் உறைந்துள்ள இந்தியர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் ஊரடங்கு தொடரும் நிலையில் அங்கு தங்கியிருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த 2 லட்சம் பேர் வெளியேற்றப்படும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். தற்போது கொரோனா அமெரிக்காவை கொடூரமாக தாக்கியுள்ளது. பொருளாதாரம் கடுமையாக சரிவடைந்துள்ளது. அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களும் தற்போது செலவினங்களை குறைக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. சில நிறுவனங்கள்  நேரடியாக ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.  அமெரிக்காவில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் திறன் அடிப்படையில் தற்காலிகமாக எச்-1பி விசாவில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த விசா வைத்துள்ள ஒருவர் 60 நாட்கள் மட்டுமே ஊதியம் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்க முடியும். அதன் பின்னர் அவர்கள் தாய்நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்பது அந்நாட்டின் சட்டமாகும்.  கொரோனா நோய் தாக்கத்தின் காரணமாக வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்க நிறுவனங்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்து  வருகின்றன.  அமெரிக்க குடியுரிமை கோரும் 2.5 லட்சம் பேரில் சுமார் 2 லட்சம் பேர் எச்-1பி விசாவில் பணியாற்றி வருபவர்கள்.  எச்-1பி விசா வைத்துள்ள  2 லட்சம் பேரும் வருகிற ஜூன் மாதத்திற்குள் பணியாற்றும் உரிமையை இழக்க உள்ளதாக குடியுரிமைக்கான கொள்கை ஆய்வாளர் ஜெர்மி நியூபில்ட் தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மி நியூபில்ட் கூறுகையில், ஏற்கனவே ஏராளமானோர் 30 முதல் 40 நாட்கள் வரையிலான காலத்திற்கு வேலை இன்றியும், சம்பளம் இன்றியும், உள்ளனர்.

மேலும் கொரோனா தாக்கம் அமெரிக்காவில் இன்னும் குறையாமல் இருக்கும் சூழலில் லாக் டவுன் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை. இதனால் அடுத்த 30 முதல் 60 நாட்களுக்குள் வேலை இழந்தவர்கள் மீண்டும் வேலையை தேடிக்கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இந்த சூழலில் எச்-1பி விசாவில் பணியாற்றும் சுமார் 2 லட்சம் வெளிநாட்டினர் அமெரிக்காவைவிட்டு தங்களது தாய்நாட்டுக்கு திரும்பும் காட்டாயத்துக்கு தள்ளப்படுவார்கள் என்றார். இதனிடையே அடுத்த சில வாரங்களுக்கு குடியுரிமை வழங்கும் நடவடிக்கையை முழுமையாக நிறுத்தி வைப்பதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் வேலைவாய்ப்பை இழந்தவர்கள் தாய்நாடு திரும்புவதை தவிர வேறு வழியே இல்லை. அவ்வாறு தாய்நாடு திரும்பலாம் என்றாலும் தற்போது கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் வான்வழி, தரைவழி எல்லைகள் மூடப்பட்டுள்ளது.
இதனால் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஜூன் மாதத்திற்குள் அமெரிக்காவில் இருந்து வெளியேற வாய்ப்புள்ள 2 லட்சம் பேரில் இந்தியர்கள் எத்தனை சதவீதம் பேர் என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

Tags : US ,Indians , America, Indians, Corona
× RELATED அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மர்ம மரணம்