×

ஊரடங்கு தளர்வா, நீட்டிப்பா? மே 2ல் தமிழக அமைச்சரவை கூட்டம்: முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட கலெக்டர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார். கொரோனா பரவும் வேகம் குறையாமல் இருப்பதால் தமிழகத்தில் மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீடிப்பதா, தொடர்வதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க மே 2ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ளது.

இதனால் தமிழகமே ஸ்தம்பித்துள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், ரயில், பஸ், ஆட்டோ, டாக்சி, பெரிய கடைகள், தியேட்டர், சிறு, குறு தொழிற்சாலைகள் என எதுவுமே இயங்காததால் தமிழகத்தின் பொருளாதார நிலை கேள்விக்குறியாகி உள்ளது. தனியார் நிறுவன தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை இல்லாமல் சம்பளம் கிடைக்காமல் ஒரு வேளை சாப்பாட்டுக்கே அவதிப்பட்டு வருகின்றனர். தமிழக அரசு ஏப்ரல் மாதம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கியது. மேலும் ஏப்ரல் மற்றும் மே மாதம் ரேஷன் கடைகளில் இலவச அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது. ரூ.500க்கு 19 மளிகை பொருட்கள் அடங்கிய பை வழங்கப்படுகிறது.

ஆனாலும், பெரும்பாலானவர்கள் ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்களை வாங்கவில்லை. தனியார் கடைகளிலேயே பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் தினசரி கூட்டம் அதிகளவில் உள்ளது. தொழில்கள் முடங்கி உள்ளதால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமலும், தங்கள் கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும் பல தொழில் நிறுவனங்கள் கஷ்டத்தில் உள்ளன. ெபரும்பாலோனோர் வங்கிகளில் வாங்கிய கடனுக்கு இஎம்ஐ கட்ட வேண்டியுள்ளது. மத்திய அரசு வங்கிகளில் வாங்கிய கடனுக்கு 3 மாதம் இஎம்ஐ கட்ட வேண்டாம் என்று கடந்த மாதம் அறிவித்தது. ஆனால் எந்த வங்கியும் மத்திய அரசு உத்தரவை மதிக்கவில்லை.

தற்போது கட்டாவிட்டாலும், பின்னர் வட்டியுடன் அந்த பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்று இமெயில் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்பி மிரட்டுகிறது. இப்படித்தான் அரசு அறிவிப்புகள் அனைத்தும் உள்ளது. இதுபோன்ற அறிவிப்புகள் பெரிய முதலாளிகளுக்கு மட்டுமே பொருந்துகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மத்திய-மாநில அரசுகள் அறிவிப்பு எதுவும் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது. அதனால் ஊரடங்கை தமிழகத்தில் படிப்படியாக தளர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில்தான், சென்னை தலைமை செயலகத்தில், தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள 12 குழுவில் இடம் பெற்றுள்ள 40 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, நேற்று காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர், “தமிழகத்தில் கிராமங்கள், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் மக்கள் அதிகளவில் உள்ளதால், முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வரும்போது அதிகளவில் நெருக்கடி ஏற்படுகிறது. அதேபோன்று காய்கறி கடைகள், மார்க்கெட்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும். டோக்கனில் வழங்கப்பட்ட தேதி, நேரத்தில் மட்டுமே வர வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் தடையின்றி செயல்பட அனுமதிக்க வேண்டும். அரிசி, எண்ணெய் ஜவ்வரிசி, முந்திரி பதப்படுத்தும் ஆலைகள் செயல்படலாம். 100 நாள் வேலை நடைபெறலாம். அங்கு 50 பேருக்கு மேல் பணியில் இருக்க கூடாது.

முக கவசம் கட்டாயம். 55 வயதுக்கு மேல் உள்ளவர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது. பச்சை பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் படிப்படியாக தொழில் துவங்க அரசு உரிய நேரத்தில் உத்தரவு வழங்கும். சிமெண்ட், சர்க்கரை, ஸ்டீல், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் செயல்பட எந்த தடையும் இல்லை. அதேநேரம் தடை செய்யப்பட்ட பகுதியில் அனுமதி கொடுக்க கூடாது. தற்போது சிவப்பு மண்டல பகுதியாக உள்ள பகுதிகளை ஆரஞ்சு பகுதியாகவும், ஆரஞ்சு பகுதியை பச்சை பகுதியாகவும் மாற்ற மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி படிப்படியாக மாற்றினால் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி கொடுக்க முடியும். இதன்மூலம் நாட்டு மக்கள் இயல்பாக தங்கள் பணிகளை செய்ய முடியும்’ என்றார்.

இதையடுத்து ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்கள் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு எந்த நிலையில் உள்ளது, மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர். கொரோனாவை கட்டுக்குள் வைத்துள்ள மாவட்ட கலெக்டர்களை முதல்வர் பாராட்டினார். இந்த கூட்டத்தை தொடர்ந்து மே 2ம் தேதி (சனிக்கிழமை) மாலை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்தும், வருகிற மே 3ம் தேதிக்கு (ஞாயிறு) பிறகு தமிழகத்தில் ஊரடங்கை தளர்த்துவதா, நீட்டிப்பதா என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தற்போதுள்ள நிலையை பார்க்கும்போது சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகர் பகுதிகளில்தான் கொரோனா தொற்று அதிகம் உள்ளது. குறிப்பாக சென்னையில் மிக அதிகமாக பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதே நேரம் கிராமம், பேரூராட்சி, நகராட்சி பகுதிகள் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதாக முதல்வர் எடப்பாடியும் நேற்று அறிவித்துள்ளார். அதனால் நகர் பகுதிகளை விடுத்து கிராமம், பேரூராட்சி, நகராட்சி பகுதியில் மே 3ம் தேதிக்கு பிறகு படிப்படியாக ஊரடங்கு தளர்த்துவது குறித்து அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேநேரம், தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு மே 17ம் தேதி வரை அனுமதி அளிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது

* சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகர் பகுதிகளில்தான் கொரோனா தொற்று அதிகம் உள்ளது. சென்னையில் மிக அதிகமாக பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
* கிராமம், பேரூராட்சி, நகராட்சி பகுதிகள் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. எனவே இப் பகுதிகளில் மே 3ம் தேதிக்கு பிறகு படிப்படியாக ஊரடங்கு தளர்த்துவது குறித்து அறிவிக்கப்படலாம்.
* தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு மே 17ம் தேதி வரை அனுமதி அளிக்க வாய்ப்பில்லை.

Tags : Tamil Nadu ,Cabinet Meeting , Curfew, Tamil Nadu Cabinet Meeting, Chief Minister, Corona
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...