×

மொடக்குறிச்சி அருகே உணவு கிடைக்காததை கண்டித்து கூலி தொழிலாளர்கள் போராட்டம்

மொடக்குறிச்சி: கொரோனா ஊரடங்கு உத்தரவால் மொடக்குறிச்சியில் தினக்கூலி தொழிலாளர்கள் கடந்த ஒரு வாரமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததை கண்டித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் தொற்று பரவுவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு அமலில் இருப்பதால் மஞ்சக்காட்டு வலசு, நேரு நகரில் வசிக்கும் சுமார் 150 குடும்பங்களில் உள்ள தினக்கூலி தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
அரசு கொடுத்த ரூ.1,000 நிவாரணத் தொகையும் காலியாகிவிட்டது. ரேஷன் கார்டு இல்லாத பலருக்கு நிவாரணத்தொகை கிடைக்கவில்லை. தினக்கூலியை நம்பி வாழ்ந்து வந்த இவர்கள், தற்போது கையில் பணம் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக உணவுப்பொருட்கள் இல்லாமலும், குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், நேற்று திடீரென சாலைக்கு வந்து போராட்டம் நடத்தினர். கடும் சிரமத்தில் அவதிப்பட்டு வரும் எங்களை பார்க்க அதிகாரிகள் யாரும் வரவில்லை. எங்களுக்கு நிவாரணப் பொருட்களையும் தரவில்லை. எங்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Tags : Wage workers ,Modakurichi , Modakurichi, food, wage workers, struggle
× RELATED பெட்ரோல், டீசல் விலையும்...