×

ஊரடங்கால் ஓய்வு கிடைப்பதால் இதய பாதிப்புகள் 60% குறைந்தது: மருத்துவர்கள் தகவல்

சேலம்: கொரோனா வைரஸ் பீதியால் பொதுமக்கள் ஓய்வில் உள்ளனர். இதன் காரணமாக இதய பாதிப்புகள்  60 முதல் 80 சதவீதம் குறைந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே இருக்கத் தொடங்கினர். மேலும், அனைவரும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் காலம் கழித்து வருகின்றனர். இதனால் பெரியவர்கள் மாரடைப்பு, மன அழுத்தம் போன்ற பாதிப்புகளில் இருந்து மீண்டுள்ளனர். இதன் எதிரொலியாக இதய பாதிப்பு சார்ந்த சிகிச்சைக்காக மருத்துவமனை வருவோரின் எண்ணிக்கை 60 முதல் 80 சதவீதம் வரை  குறைந்துள்ளது.

இது குறித்து சேலம் அரசு மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கூறியதாவது, ‘‘மருத்துவமனைக்கு இதய பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை, வழக்கமான நாட்களில் அதிகமாக இருக்கும். இதய பாதிப்புடன் வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும், உயர் சிகிச்சை அளிப்பதற்கும் ஏதுவாக மருத்துவமனைகளில் ஐசியு அனைத்து நேரங்களிலும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால்  இதய பாதிப்பு காரணமாக வருவோர் எண்ணிக்கை 60 முதல் 80 சதவீதம் வரை குறைந்துள்ளது. பொதுவாக இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக இருப்பது மன அழுத்தம், குடும்பத்தில் ஏற்படும் குழப்பம், கவலை, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவை தான்.

தற்போது, பொதுமக்கள் பணிகள் இல்லாமல் இருப்பதால் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பதால் கவலைகள் பறந்தோடியுள்ளது. மதுபானம், சிகரெட் போன்ற பழக்கத்திற்கு சிலர் அடிமையாகியுள்ளனர். இந்நிலையில் வீட்டிலே இருப்பதால் அந்த பழக்கங்களும் தவிர்க்கப்பட்டுள்ளது. நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ள  நோயாளிகள் சரியான நேரத்தில் சாப்பிடுவதுடன், மாத்திரைகள் எடுத்து கொள்வது, புகை மற்றும் ஒலி மாசுவில் இருந்து விலகி இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் இதய பாதிப்புகள் குறைந்துள்ளது. இவ்வாறு கூறினர்.



Tags : heart attacks ,doctors , Curfew, heart attacks, doctors
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை