×

பாலிவுட் நடிகர் இர்பான் கான் மரணம் : மோடி இரங்கல்

சென்னை: பெருங்குடல் தொற்றுநோய் காரணமாக நேற்று முன்தினம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த பாலிவுட் நடிகர் இர்பான் கான், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது 54. லஞ்ச் பாக்ஸ், பிகு, மக்பூல், ஹைதர் உள்பட பல படங்களில் நடித்து தனது யதார்த்த நடிப்பால் புகழ் பெற்றவர் இந்தி நடிகர் இர்பான் கான். சில வருடங்களுக்கு முன் நடிகர் இர்பான் கான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த செவ்வாய் அன்று இரவு திடீரென்று உடல்நிலை மோசமடைந்ததால், மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பெருங்குடலில் தொற்று ஏற்பட்டிருந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், செவ்வாய் பின்னிரவு அவர் காலமாகி விட்டதாக வந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து, அவரது செய்தி தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டார்.

ஆனால், நேற்று மதியம் இர்பான் கான் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது திடீர் மரண தகவல் அறிந்து பாலிவுட் படவுலகினர்  அதிர்ச்சி அடைந்தனர். அவரது மனைவி மற்றும்  மகன்களுக்கு இரங்கல் தெரிவித்தனர். பிரதமர் மோடி இரங்கல் செய்தியில், இர்பான் கானின் மறைவு சினிமா, நாடக உலகிற்கு இழப்பாகும். வெவ்வேறு தளங்களில் தனது நடிப்பால் அவர் நினைவு கூறப்படுவார்’ என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக் கான், கமல் ஹாசன், மகேஷ் பாபு உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று இர்பான் கானின் தாயார் சயீதா பேகம் ஜெய்ப்பூரில் காலமானார். தேசிய ஊரடங்கு அமலில் இருப்பதால் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. வீடியோகால் மூலம் தனது தாயாருக்கான இறுதி மரியாதையை செலுத்தினார். புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததால், இர்பான் கான் திரைப்படங்களில் ஒரு வருடம் நடிக்காமல் இருந்தார்.

பிரிட்டனில் சிகிச்சை பெற்றபோது, அவர் நடித்த ‘அங்க்ரேஸி மீடியம்’ என்ற படம் ஊரடங்குக்கு முன் கடைசியாக வெளியானது. ஒருநாள் மட்டுமே ஓடியது. காரணம், ஊரடங்கு காரணமாக அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு விட்டன. பிறகு ஓடிடி தளத்தில் படம் வெளியானது. பான்சிங் தோமர் இந்தி படத்துக்காக அவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். தி லைப் ஆப் பை, ஜுராசிக் வேர்ல்ட், ஏஞ்சலினா ஜுலி நடித்த மைட்டி ஹார்ட் ஆகிய ஹாலிவுட் படங்களில் அவர் நடித்துள்ளார். ஜனவரி 7, 1967ம் ஆண்டு ராஜஸ்தானின் டோங் மாவட்டத்தில் உள்ள நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் இர்பான் கான். அவருக்கு 18 வயதானபோது தந்தை காலமானார்.

நடிகராக ஆசையிருந்தும் தன்னம்பிக்கை குறைவாக இருந்த இர்பானுக்கு, மிதுன் சக்ரவர்த்தி நடித்த ம்ரிகயா படம்தான் நடிக்க நம்பிக்கை தந்திருக்கிறது. நிறம் குறைந்தவர் ஹீரோவாக நடிக்க முடியும் என்றால், தன்னாலும் நடிக்க முடியும் என்று உணர்ந்திருக்கிறார். ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நாடகக் கலையில் பட்டம் பெற்ற இர்பான், 1984ம் ஆண்டு டெல்லியின் தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு இர்பானுடன் படித்த சுதாபா சிக்தர்தான் அவரது மனைவி. 1988ம் ஆண்டு மீரா நாயரின் சலாம் பாம்பே படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்ததுதான் இர்பானின் முதல் பாலிவுட் அறிமுகம். பின்னாட்களில் மீரா நாயரின் தி நேம்ஸேக், மைக்ரேசன், நியூயார்க், ஐ லவ் யூ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

Tags : Irfan Khan ,death ,Modi , Bollywood actor, Irrfan Khan, death, Modi, condolences
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...