×

‘ஓர்க் அட் ஹோம்’ தப்பாயிடிச்சோ...தேவையில்லாமல் உலகம் முழுவதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம்: ஊரடங்கால் இப்படியும் ஒரு பிரச்னை

வாஷிங்டன்: கொரோனா ஊரடங்கு காரணமாக கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகள் தடைப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் தேவையில்லாமல் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐநா மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு  தெரிவித்துள்ளது. கொரோனா  நோய் தொற்று காரணமாக  உலகளவில் பல்வேறு நாடுகள் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளன. இதன் காரணமாக வரும் மாதங்களில் உலகம் முழுவதும்  திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கும் சூழல் உள்ளதாக ஐநா மக்கள் நிதி மற்றும்  கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் நாடாலியா கனெம் கூறியுள்ளதாவது:

ஊரடங்கு காரணமாக கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகள் கிடைப்பது தடைபட்டுள்ளது. இதன் காரணமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளை சேர்ந்த 4.7 கோடி பெண்கள் நவீன கருத்தடை சாதனங்களை உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் மாதங்களில் தேவையில்லாமல் உலகம் முழுவதும்  பல லட்சம் பெண்கள் கர்ப்பம் தரிக்கும் சூழல்நிலவுகிறது. பெண்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள முடியாததோடு, திட்டமிடப்படாத கர்ப்பத்தால் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். அதே நேரத்தில் பாலின அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான இதர  வன்கொடுமைகளும் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்க கூடும்.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த ஊரடங்கினால்  உலக அளவில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்  அதிகரிக்கும் என புதிய தரவுகள் குறிப்பிடுகின்றன.

நோய் தொற்றானது ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளது. பத்து லட்சத்துக்கும் அதிகமான பெண்கள்  தங்களது குடும்பத்தை நடத்துவதற்கான திட்டமிடும் திறன் மற்றும்  தங்களது உடல் மற்றும் ஆரோக்கிய பாதுகாப்பையும் இழக்க நேரிடும். நோய் தொற்று எண்ணிக்கை தொடர்பான தெளிவான பார்வை தொடங்கியுள்ள நிலையில் மனித செலவு அசாதாரணமானது என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். கொரோனாவால் ஏற்படும் பொருளாதார மற்றும் உடல் ரீதியிலான இடையூறுகளானது பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் மற்றும் ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தலை விளைவிக்கும். உலக அளவில் 114 குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் சுமார்  40.5 கோடி பெண்கள் கருத்தடை மருந்துகளை பயன்படுத்துகின்றனர் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது 6 மாத காலத்துக்கான குறிப்பிடத்தக்க அளவு  ஊரடங்கு காரணமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 4.7 கோடி  பெண்கள் நவீன கருத்தடைகளை பயன்படுத்த முடியாமல் போகக்கூடும். இதன் விளைவாக  உலக அளவில் கூடுதலாக 70 லட்சம் பெண்கள் திட்டமிடப்படாத கர்ப்பம் அடைய வழிவகுக்கும். மேலும் இந்த ஊரடங்கினால் பாலின அடிப்படையிலான வன்முறையானது 3.1கோடி அளவுக்கு அதிரிக்கக்கூடும்.  பெண் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு தாமதம் ஏற்படலாம். இதனால் ஏற்கனவே இருந்ததை காட்டிலும்  20 லட்சம் வழக்குகள்  அதிகமாகக்கூடும்  எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் 1.3 கோடி குழந்தை திருமணங்கள் நடக்கலாம் என்றும் ஊரடங்கு தொடர்ந்தால் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் 1.5கோடி வழக்குள் பாலின அடிப்படையிலான வழக்குகள் அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Home ,Org ,women ,Orgill At Home ,world , Corona Curfew, Women Pregnancy, Curfew
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...