×

சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என குற்றச்சாட்டு சென்னையில் சமூக பரவல் தீவிரம்? 39 பேருக்கு யார் மூலம் பரவியது என தெரியவில்லை

சென்னை: சரியான திட்டமிடல் இல்லாததால் சென்னையில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. மேலும் 39 பேருக்கு யார் மூலம் தொற்று பரவியது என்பதை கண்டறிய முடியாததால் இதற்கான தோல்வியை சுகாதாரத்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.   தமிழகத்தில் கொரோனாவின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் அதன் தாக்கம் மின்னல்  வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் 50 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில், நோய் தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க பல்வேறு காரணங்களை கூறலாம். ஒருவருக்கு தொற்று வந்தால் அவருக்கு யார் மூலம் வந்தது என்பது தெரிந்தால் தான் அவருடன் தொடர்புடைய சங்கிலி தொடரை உடைக்க முடியும்.

 கான்டாக்ட் டிரேசிங் என்பது கண்டறியாமல் விட்டால் சம்பந்தப்பட்ட நபருடன் தொடர்புடைய பலர் இந்நோய் தொற்றுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். அப்படிப்பட்ட சூழ்நிலை வந்துவிட்டால் அதை தான் சமூக பரவலை அடைந்து விட்டதாக கருதப்படும். அப்படி ஒரு நிலையில் சென்னை மாநகரம் பயணம் செய்து கொண்டிருப்பது தமிழக அரசுக்கு பெரும்  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.   சென்னையில் மின்னல் வேகத்தை எட்டியிருப்பதற்கு உதாரணம் இப்போதைய புள்ளிவிபரம் தான்.  சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் நேற்றுமுன்தினம் 103 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இதுவரை 673 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினமும் ஏற்படும் கொரோனா தொற்றில்  சென்னையில் தான் 90 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் நேற்றுமுன்தினம் தொற்று ஏற்பட்டவர்களில் 39 பேருக்கு யார் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியவில்லை என்கிறார்கள்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அதன்பிறகு கொரோனா குறைவதற்கு பதிலாக வேகமெடுக்கத் தொடங்கி இருப்பது சுகாதார அதிகாரிகள் முதல் மருத்துவர்கள் வரை பலரை இது குழப்பம் அடையச் செய்துள்ளது. இந்த தோல்விக்கான காரணம் குறித்து தமிழக சுகாதாரத்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.  இதுகுறித்து மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:   சென்னையில் நோய் தொற்று அதிகரிக்க மக்கள் தொகையும் ஒரு முக்கிய காரணம். சென்னையில் மட்டும் ஒன்றேகால் கோடி பேர் வசிக்கின்றனர்.  பல்வேறு நாடுகளில் இப்படி கோடிக்கணக்கில் மக்கள் வசிக்கும் இடங்களில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி பார்த்தால் சென்னையில் குறைவு தான்.

 அதிக மக்கள் தொகை, குறுகலான வசிப்பிடங்கள் என்பதால் நோய் தொற்றுள்ளவருடன் தொடர்புடையவர்களை கண்டறிவது சவாலான ஒன்றாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் இந்த பிரச்னை இல்லை என்பதால் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். ஆனால்  சென்னையில் கான்டாக்ட் டிரேஸ் செய்வது மிகவும் கடினமாக மாறியுள்ளது.   இதற்கு முக்கிய காரணம் சரியான திட்டமிடல் இல்லை என்று தான் கூற வேண்டும்.  எந்த பகுதிகளை பிரிப்பது ? எப்படி கன்டெயின்மெண்ட் பகுதி அமைப்பது? என்று சரியான திட்டமிடல் இல்லை. தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் கொரோனாவை கட்டுப்படுத்தி வரும் நிலையில் சென்னை இப்படி தோல்வி அடைவதற்கு இது கூட காரணமாக இருக்கலாம். அதுபற்றி சுகாதாரத்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.  குறிப்பாக சென்னையில் சிவப்பு மண்டல  பகுதிகளில் சரியான கட்டுப்பாடுகள் இல்லை. அதேபோன்று மக்களும் மிகவும் அலட்சியமாக இருப்பதும் முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chennai , Chennai, Corona, curfew
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!