×

கொரோனாவால் கொழிக்கும் தீயணைப்புத்துறை கருவிகள் வாங்க பல லட்சம் ரூபாய் பேரம்: இன்று ஆர்டர் வழங்க அதிகாரிகள் முடிவு

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த மருந்துகள் தெளிக்கும் கருவிகளை பல கோடி ரூபாயில் வாங்குவதற்கான ஆர்டர் இன்று வழங்கப்பட உள்ளன. அதில் முன்பே பல லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டு பணம் கைமாறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.  கொரோனா தடுப்புக்காக தமிழகம் பல கோடிகளை மருத்துவ, சுகாதார மற்றும் தடுப்பு உபகரணங்கள் வாங்க செலவு செய்து வருகிறது. அதில், தடுப்பு உபகரணங்கள் வாங்க தீயணைப்பு துறைக்கு தமிழக அரசு தாராளமாக நிதி வழங்கி வருகிறது. மேலும், கொரோனாவுக்கு நிதியை அதிகமாக ஒதுக்குவதால் ஏற்பட்ட நிதி பற்றாக்குறையை சரி செய்யும் பொருட்டு தற்போது பல சிக்கன நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இதற்காக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு மற்றும் வைப்பு நிதியிலும் கை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழக அரசின் நிதி நிலைமை இப்படியிருக்க தமிழ்நாடு தீயணைப்பு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், பல கோடிகளில் கிருமி நாசினி உள்பட பல தடுப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  பேரிடர் காலங்களில் டெண்டர் விட்டு கருவிகள் வாங்கவேண்டிய அவசியம் இல்லை. நேரிடையாக நிறுவனங்களிடம் பேசி வாங்கி கொள்ளலாம். இந்த விதியை பயன்படுத்தி சுகாதார பேரிடரை சாதகமாக்கிக் கொண்டு அரசின் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் கொள்முதல் செய்யும் கம்பெனிகளிடம் இருந்து சில கோடிகளை கமிஷனாக பெற மறைமுகமாக பேரம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக பணம் பெரிய அளவில் கைமாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தீயணைப்புத்துறை இயக்குநராக உள்ள டிஜிபி சைலேந்திரபாபு நேர்மையானவர். ஆனால் தீயணைப்புத்துறை மட்டுமல்லாது ரயில்வே துறைக்கும் அவர்தான் பொறுப்பு. இதனால், இந்த விலை உயர்ந்த கருவிகள் வாங்கும் பொறுப்புகளை கீழ்மட்ட அதிகாரிகளிடம் அவர் ஒப்படைத்துள்ளார். இதனால், தற்போது உள்ள இயக்குனரிடம் பல உண்மைகளை மறைத்து அவரை கைப்பாவையாக மாற்றி இந்த ஊழலை சென்னையில் உள்ள சில அதிகாரிகள் ஒன்று சேர்ந்து திறமையாக செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.  சென்னையில் உள்ள அதிகாரிகள், தங்களது சாதுர்யத்தால் இதற்கு முன்பு இருந்த இயக்குனர்களையும் இதுபோல கைப்பாவையாக மாற்றி 40 கோடி மதிப்புள்ள 2 (இரண்டு) பிராண்டோ ஸ்கை லிப்ட் வாகனம் மற்றும் பல கோடி மதிப்புள்ள மீட்பு உபகரணங்களை கொள்முதல் செய்துள்ளனர். அதன் மூலம் பெரும் தொகையை கமிஷனாக சென்னை அதிகாரிகள் பெற்று கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இவர்களது ஊழலுக்கு கண்மூடித்தனமாக துணை நிற்பவர்கள் மதுரை மற்றும் வேலூர் மண்டல தீயணைப்புத்துறை அதிகாரிகள் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், சென்னையில் உள்ள சில மாவட்ட அலுவலர்கள் மற்றும் இயக்குனரின் அலுவலக ஊழியர் மற்றும் ஒரு பெண் அதிகாரி ஆகியோர் சேர்ந்து சென்னையில் பல உயர் மாடிக் கட்டிடங்களுக்கு சான்றிதழ் வழங்க பல லட்சங்களை லஞ்சமாக பெறுவது வெளிப்படையாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், சென்னை உயர் அதிகாரி ஒருவர், தமிழக விஐபியின் நெருங்கிய உறவினர் என்பதால் மற்ற அதிகாரிகளும் இவரை எதிர்க்க அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த அதிகாரி இதற்கு முன்பு சென்னையில் துணை இயக்குனராக இருந்த காலத்தில்தான் துறைக்கு மீட்பு உபகரணங்கள் கொள்முதல் மற்றும் பணியிட மாறுதல் செய்யும் இரண்டு முக்கிய பணிகள் நடைபெற்று வந்தன.

இதனால் தற்போது, பேரம் பேசி முடிக்கப்பட்டு, தற்போது கொள்முதல் செய்யப்பட உள்ள கருவிகளுக்கான ஆர்டர் இன்று வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
 இதனால், தீயணைப்புத்துறை இயக்குநர் நேரில் தலையிட்டு, இந்த கருவிகள் கொள்முதலை நேர்மையாக நடத்தவும் மீண்டும் துறை உபகரணங்கள் கொள்முதல் செய்யும் அதிகாரத்தை நேர்மையானவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்ைகள் எழுந்துள்ளன. தீயணைப்புத்துறைக்கு கொரோனா கிருமி நாசினி தெளிக்கும் கருவிகள் கொள்முதல் விவகாரம் தீயணைப்புத்துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

Tags : Corona , Corona, fire department equipment,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...