×

மருத்துவ பாதுகாப்பு உபகரணம் பற்றாக்குறை கண்டித்து டாக்டர்கள் நிர்வாண போராட்டம்: ஜெர்மனியில் 1.17 லட்சம் பேரை காப்பாற்றியவர்களின் பரிதாபம்

பெர்லின்: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி 7வது இடத்தில் உள்ளது. இங்கு, 1.60 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டதட்ட 6,300 பேர் பலியான நிலையில், 1.17 லட்சம் பேர் குணமாகி உள்ளனர். உலகளவில் குணமானவர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் ஜெர்மனி உள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், நாட்டில் மருத்துவ பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை குறித்து, அரசின் கவனத்தை ஈர்க்க தாங்கள் நிர்வாணமாக இருக்கும் படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் தங்களது போராட்டத்தை பிளாங்க் பெடென்கென் (நிர்வாண மனப்பான்மை ) என்று அழைத்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், பொது மருத்துவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யவில்லை என்றும், சரியான பாதுகாப்பு கருவிகளை வழங்காமலும், கொரோனா வைரசின் ஆபத்தை உணராமல் அரசு செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அரசின் தரப்பில் பாதுகாப்பு ஆடைகளை உருவாக்கும் நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி திறனை அதிகரித்துள்ளன. ஆனால் அதிகரித்த தேவையால், உற்பத்தியை பூர்த்தி செய்ய முடியவில்லை என்கிறது. தி கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஏப்ரல் தொடக்கத்தில் தலைநகர் பெர்லினுக்கு அனுப்பப்பட்ட பாதுகாப்பு முகக் கவசங்கள், பாங்காக் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும்,

அவை அமெரிக்காவிற்கு திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், பிளாங்க்பெடெங்கன் இணையதளத்தில் ஒரு மனுவை வெளியிட்டுள்ளனர். அதில், சுமார் 1,000 மருத்துவர்களின் கையொப்பம் உள்ளது. குழுவில் உள்ள பொது மருத்துவரான ரூபன் பெர்னாவ் கூறுகையில், ‘பொது மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ நிபுணர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படவில்லை. வைரசை சமாளிக்க தேவையான பயிற்சி குழுக்களும் போதுமானதாக இல்லை. நிர்வாணம் என்பது நாம் பாதுகாப்பு இல்லாமல் எவ்வளவு நேரம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதற்கான அடையாளமாகும்.

மருத்துவமனைகளில் இருந்து கிருமிநாசினி மற்றும் முகக் கவசங்கள் திருடப்படுகின்றன. ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் கும்பல்களுக்கு, காவல்துறை உடந்தையாக உள்ளது. மருத்துவமனைகளில் எங்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்’ என்றார்.

Tags : Doctors ,Germany , Medical Safety Equipment, Doctors, Naked Struggle, Germany
× RELATED சில்லி பாய்ன்ட்…