கொரோனா தாக்கம் எதிரொலி; புளியங்குடியில் எலுமிச்சை சந்தை மூடல்: விவசாயிகள் கண்ணீர்

புளியங்குடி: புளியங்குடியில் கொரோ னா வைரஸின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து எலுமிச்சை சந்தை மூடப்பட்டது. முக்கியமான சீசன் காலத்தில் சந்தை மூடப்பட்டதால் எலுமிச்சைகளை விற்க முடியாமல் பல லட்சம் இழப்பு ஏற்படும் என வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். புளியங்குடி பகுதியில் விளையக்கூடிய எலுமிச்சை பழம் பிரசித்தி பெற்றது. இங்கிருந்து இந்தியா முழுவதும் மற்றும் கேரளா வழியாக அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. எலுமிச்சை வியாபாரிகளுக்கு ஏப்ரல், மே மாதம் அதிக அளவு வியாபாரம் நடக்ககூடிய மாதமாகும். புளியங்குடி பகுதியில் எலுமிச்சை சந்தை சுமார் 26 கடைகளுடன் இயங்கி வருகிறது.

இங்கு நாளொன்றுக்கு சாதாரண நாட்களில் ஒரு கோடி ரூபாயும் சீசன் காலங்களில் சுமார் 3 கோடி வரையும் வியாபாரம் நடைபெறும். கொரோனா வைரஸ் தொற்று நோய் புளியங்குடியில் அதிகரித்ததை தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி இங்கிருந்த 26 கடைகளும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கும், அருகிலுள்ள தனியார் பள்ளிக்கும் தலா 13 கடைகள் வீதம் மாற்றபட்டது. கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் அதிகரித்ததை தொடர்ந்து அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் வராமல் கட்டுபாடு விதிக்கப்பட்டு தன்னார்வலர்கள் மூலமே பொதுமக்களுக்கு அனைத்து பொருட்களும் வீட்டிலேயே கொடுக்கப்படுகிறது.

இதனால் புளியங்குடியில் உள்ள எலுமிச்சை சந்தையும் மூடப்பட்டது. புளியங்குடியை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் சுமார் 5000க்கும் அதிகமான விவசாயிகள் உள்ளனர். இவர்கள் தங்களது நிலத்தில் எலுமிச்சையை மட்டுமே முக்கிய பயிராக பல வருடங்களாக வளர்த்து வருகின்றனர். இவர்கள் தங்களது தோப்பிற்கு சீசன் காலங்களில் தினமும் சென்று எலுமிச்சை பழங்களை பறித்து சந்தைக்கு கொண்டு வருவார்கள். அங்கிருந்த கமிஷன் கடைகள் மூலம் அவைகள் ஏலம் விடபட்டு வியாபாரிகள் அதனை வாங்கி செல்வார்கள். தற்போது புளியங்குடியில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டதால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. வியாபாரிகளும் புளியங்குடி ஊருக்குள் வர முடியவில்லை.

விவசாயிகள் காய்களை பறிக்க முடியாமலும், பறித்த காய்களை பாதுகாக்க முடியாமலும் செடியிலே அழுகுவதை பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர். ஒவ்வொரு விவசாயிக்கும் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே அரசு உடனடியாக தலையிட்டு அவர்களின் வாழவாதரத்தை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். புளியங்குடி எலுமிச்சை சந்தை சங்கத்தின் பொருளாளர் முத்துபாண்டி கூறுகையில், புளியங்குடியில் எலுமிச்சை உற்பத்தியை நம்பி சுமார் 5000க்கும் அதிகமான விவசாயிகள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமே இந்த இரண்டு மாதங்களை நம்பி தான் உள்ளது.

புளியங்குடியில் ஊரடங்கு கடுமையாக இருப்பதால் வியாபாரிகளும் ஊருக்குள் வரமுடியவில்லை. விவசாயிகளும் பழங்களை பறித்து ஊருக்குள் கொண்டு வரமுடியவில்லை. ஆகவே இந்த எலுமிச்சை சந்தையை தற்காலிகமாக புளியங்குடி சங்கரன்கோவில் ரோட்டில் முள்ளிகுளத்தில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் வைத்தால் வியாபாரிகளும், விவசாயிகளும் புளியங்குடி ஊருக்குள் வராமல் வியாபாரம் செய்ய முடியும். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. அரசு உடனடியாக தலையிட்டு இதனை நடைமுறைபடுத்தி இப்பகுதியில் உள்ள விவசாயிகளை காப்பற்ற வேண்டும் என்றார்.

Related Stories:

>