×

தாயை அடக்கம் செய்த அரை மணி நேரத்தில் பணிக்கு வந்த துப்புரவு பணியாளருக்கு முதல்வர் பாராட்டு

பெரம்பலூர்: தாயை அடக்கம் செய்த அரைமணி நேரத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணிக்கு திரும்பிய பெரம்பலூர் துப்புரவு பணியாளருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து போலீஸ் நிலையத்தில் தினமும் கிருமி நாசினி தெளிக்க ஊராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. வி.களத்தூர் காமராஜர் தெருவில் வசிக்கும் துப்புரவு பணியாளர் அய்யாதுரை(47) கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். இவரது தாய் அங்கம்மாள் (75) கடந்த 21ம் தேதி மதியம் 2 மணிக்கு இறந்தார்.

அவரது உடலை மாலை 6 மணிக்குள் அடக்கம் செய்து முடித்த அய்யாதுரை, 6.30 மணிக்கு மீண்டும் கிருமிநாசினி தெளிக்கும் வேலைக்கு வந்து விட்டார். தகவல் அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் தூய்மை பணியாளர் அய்யாதுரை தாயை இழந்த சோகம் மறையும் முன்னரே, இறுதிச்சடங்கு முடிந்ததும் வந்து கொரோனா பணியில் ஈடுபட்டது நெகிழ்ச்சி அளிக்கிறது. மக்களை காக்க வேண்டும் என்ற அவரது உயர்ந்த எண்ணத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் தலை வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அய்யாதுரை கூறுகையில், ‘‘தமிழக முதல்வரே பாராட்டி இருப்பது சந்தோஷமாக உள்ளது.

எந்த அளவுக்கு பணி செய்திருக்கிறேனோ அந்த அளவுக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளது. 21 வருடமாக மக்களுக்காக பணிபுரிந்து வருகிறேன். இனியும் சளைக்காமல் பணி புரிய வேண்டுமென்ற ஆசை அதிகரித்துள்ளது. எனது தாயை அடக்கம் செய்து விட்டு பணிக்கு வந்தேன். பஞ்சாயத்து தலைவர் அதுக்குள்ள ஏன் வேலைக்கு வந்துட்டேன்னு பதறினார். அதான் கொரோனா வந்திருச்சே.  அம்மாவை புதைச்சாச்சு. இனி வீட்டில் இருந்து என்ன பண்ணப்போகிறேன். மக்களுக்காக தொடர்ந்து பணிபுரிய போகிறேன். அப்படின்னு சொன்னதுக்கு ஊராட்சித்தலைவர்  பாராட்டினார்’’ என்றார்.


Tags : burial ,cleaning staff ,Chief Minister , Cleaning staff, CM, complimentary
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...