×

ஊரடங்கால் வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுமதி: உள்துறை அமைச்சகம்

டெல்லி: ஊரடங்கு உத்தரவால் வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகளை அவர்களது சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள தனி குழுவை நியமிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்தியாவில் பரவிய கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நோக்கில் முதலில் நாடு முழுவதும்  21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மேலும் 19 நாட்களுக்கு அதாவது மே மாதம் 3-ந்தேதி வரை இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் போக்குவரத்து சேவைகள் முடங்கி இருக்கிறது.

இதனால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்களும் செயல்படாத நிலை ஏற்பட்டதால், தங்கும் இடம், உணவு உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யவும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். அதேபோல், ஆன்மீகப்பயணம் மேற்கொண்டவர்கள், பிற நோக்கங்களுக்காக வெளி மாநிலம் சென்றவர்களும் ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.  

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோர்,  ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாமல் பல்வேறு இடங்களில் தவித்து வருகின்றனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேத்தில் தவிக்கும் வெளிமாநிலத்தவர்கள், தங்களது மாநிலம் அல்லது யூனியன் பிரதேத்திற்கு குழுவாக செல்ல விரும்பினால், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஆலோசனை நடத்தி, சாலை மார்க்கமாக அவர்களை அழைத்து வர ஒப்பு கொள்ள வேண்டும்.

நோய் தொற்று இல்லாதவர்கள் மட்டுமே சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். குழுவாக செல்ல விரும்புவோர்கள் பஸ்களில் மட்டுமே செல்ல வேண்டும். அந்த பஸ் தூய்மைபடுத்தப்பட்டிருப்பதுடன், சமூக விலகல் முறைப்படி இருக்கைகள் அமைக்க வேண்டும். இடம்பெயரும் நபர்கள் தங்கள் இருப்பிடங்களை அடைந்தவுடன், உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். வீட்டுக்குள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.  மேலும், இடம் பெயரும் நபர்கள் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தத வலியுறுத்த வேண்டும்.  அவர்களின் உடல் நலம்  கண்காணிக்கப்பட வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags : hometowns ,Interior Ministry Workers ,home cities ,Home Ministry , Curfew, workers, students, tourists, the interior ministry
× RELATED ஆயுதபூஜை தொடர் விடுமுறைக்காக சொந்த...