×

ராமேஸ்வரத்தில் சூறைக்காற்று; விசைப்படகுகள் உடைந்து சேதம்: மின்தடையால் மக்கள் அவதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதியில் இன்று அதிகாலை வீசிய சூறைக்காற்றுக்கு கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான விசைப்படகுகள் உடைந்து சேதமடைந்தன. நகர் பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். தமிழக கடலில் மின்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை உள்ளது. இதனால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் உட்பட தமிழகம் முழுவதும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரை நிறுத்தம் செய்யப்ப்ட்டுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் ராமேஸ்வரம் பகுதியில் திடீரென்று சூறைக்காற்று வீசியது.

1 மணி நேரத்திற்கும் மேலாக வீசியதால் கடை வீதிகளில் இருந்த தகர போர்டுகள் பிய்த்துக்கொண்டு காற்றில் பறந்தன. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர். கடலிலும் அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்திற்கு மேல் காற்று சுழற்றியடித்தது. இதனால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான படகுகள் கயிற்றை அறுத்துக்கொண்டு கரை ஒதுங்கின. காற்றின் வேகத்தில் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பக்கப்பலகைகள் உடைந்து ஏராளமான படகுகள் சேதமடைந்தன.

தொடர்ந்து காற்று வீசிய நிலையில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பாம்பன் பகுதியில் சாரல் மழையும் பெய்தது. கரை ஒதுங்கிய படகுகளையும், கடலில் மூழ்கிய படகுகளையும் மீட்கும் பணியில் மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல்ஜப்பார் மற்றும் மீன்துறை அதிகாரிகள் காற்றில் சேதமடைந்த படகுகளை நேரில் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். படகுகள் சேதமடைந்ததால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags : Rameswaram ,Cyclone ,Hurricane Katrina , Rameswaram, Hurricane, Fireworks, Damage
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்...