×

எந்தெந்த தொழில்கள், பணிகளை படிப்படியாக தொடங்கலாம்?... மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிரமாகி வருகின்றன. அதில் கேரளா, கர்நாடகாவை தவிர தமிழகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் அவர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில்; இந்த ஆய்வில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனோ வைரஸ் நோய் தொற்றின் தற்போதைய நிலவரமும், அதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்பணிகளை தீவிரப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன:

* மாவட்டங்களில் எந்தெந்த தொழில்கள், பணிகளை படிப்படியாக தொடங்கலாம் என ஆட்சியர்கள் அறிக்கை அளிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
* ஒவ்வொரு மாவட்டத்திலும் நோய் பரவலின் தற்போதையை நிலைக்கு ஏற்ப பணிகளை தொடங்குவது குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும்
* பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள இடங்களில் அரசு அறிவித்த நிவாரண பொருட்கள் அவர்களிடம் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்
* பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* விடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் எவரேனும் இருந்தால், அவர்களை கண்டறிந்து, அவர்களுக்கும் நிவாரண பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும்

* வேளாண் பணிகள் பாதிக்காத வண்ணம், விவசாயிகளுக்குத் தேவையான உபகரணங்கள், இடுபொருட்கள்
ஆகியவை எந்தவித தங்குதடையுமின்றி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்
* விவசாயிகளின் விளைபொருட்களை சந்தைகளுக்குக் கொண்டு செல்ல எந்த தடையும் இருக்கக் கூடாது.
* மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவாக திரும்பும் வகையில், மாவட்டங்களில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு பகுதிகளில் உரிய நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, அப்பகுதிகளை, பச்சை பகுதிகளாக மாற்றிட போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
* தேசிய மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் எந்த தங்குதடையுமின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
* சமூக விலகலை கண்டிப்பாக கடைபிடித்தும், முகக்கவசம் அணிவதை உறுதி செய்தும், மூன்றில் ஒரு பங்கு
பணியாளர்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் (ஊடிவேயinஅநவே ஷ்டிநே) தினந்தோறும் 2 முறை கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.
* பொதுக் கழிவறைகள் தினந்தோறும் 3 முறை சுத்தப்படுத்தி கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.
* இப்பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் வெளியே வராத வகையில், அப்பொருட்களை அவர்களுடைய வசிப்பிடத்திலேயே வழங்க சிறப்பு ஏற்பாடுகளை தொடர்ந்து செய்ய
வேண்டும்.
* தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் தினமும் சுமார் 7 லட்சம் ஏழை எளிய மக்களுக்கு தரமான உணவு 3 வேளையும் வழங்கப்பட்டு வருகிறது
* அதைப்போல சமுதாய சமையல் கூடங்களும் அமைக்கப்பட்டு, தினந்தோறும் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள்,ஆதரவற்றோர் மற்றும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு தரமான
உணவு வழங்கப்பட்டு வருகிறது.

* இவ்விடங்களில் தொடர்ந்து சுவையான, தரமான, சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் கள ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
* தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளில் மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்
கொள்வதற்கான டோக்கன்கள் வழங்கும்போது அவற்றில் நேரம், நாள் ஆகியவற்றை அச்சடித்து வழங்க வேண்டும்.
* டோக்கன்களை வழங்கும்போது, எந்த நாள் மற்றும் நேரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறிவிட்டு வர வேண்டும்.
* காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் மற்றும் நியாய விலைக்கடைகளில் தகுந்த சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
* காவல்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தினமும், ஒலிபெருக்கி மூலமாக சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசம் அணிந்து வரும்படியும், சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பேணவும் அறிவிப்பு செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய் தொற்று தடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டிய சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளில் பகுதிகளில் நோய் பரவலை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன:

1. சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா தொற்றை கண்காணிக்க தலா ஒரு குழு அமைக்கப்படும்
2. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தினந்தோறும் 2 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்
3. இது போன்ற ஆறு சிறப்பு குழுக்கள் திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் சேலம் மாநகராட்சிகளுக்கும் அமைக்கப்படும்.
4. நோய் தொற்றுக்கான சோதனையை தீவிரப்படுத்தி, விரைவாக அதன் முடிவுகளை பெறுவது உள்ளிட்டவை, இக்குழுக்களின் முக்கிய பணிகளாகும்.
5. இதன் மூலம் நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகள் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்படும்.

6. நோய்த் தடுப்பு பகுதிகளில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லை எனில், நகரும் கழிப்பறை வசதிகள்  கூடுதலாக ஏற்படுத்தப்படும்.
7. சென்னை மாநகரில் நோய் தொற்றுக்கான சோதனை செய்வதற்கு தற்போதுள்ள நடமாடும் சோதனை வாகனங்கள் 3-ல் இருந்து 10 ஆக அதிகரிக்கப்படும்.
8. இதன் மூலம் நோய் தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் இருப்பிடங்களுக்கே சென்று விரைவாக சோதனை மேற்கொள்ள முடியும்.
9. நோய்த் தொற்று உள்ள பகுதிகளில் சோதனைகள் மேலும் அதிகப்படுத்தப்படும்.
10. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் சமூக இடைவெளி தீவிரமாக கடைப்பிடிக்கப்படுவதையும், தனிநபர் சுகாதாரம் பேணுவதையும் உறுதிப்படுத்தி உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

11. அப்பகுதிகளில் மக்களுக்கு கிருமி நாசினி, முகக் கவசம், போன்றவை வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு வீட்டிற்கும் 250 கிராம் கிருமிநாசினி பவுடர் வழங்கப்படும்.
12. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் சூரணம் போன்ற மருந்துகளை வழங்குவது உறுதி
செய்யப்படும்.
13. அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, கிருமி நாசினி தெளிக்கப்படும்.
14. நோய் தொற்று பகுதிகளில், ஒரு நாளைக்கு இருமுறை கிருமி நாசினி தெளிப்பது உறுதி செய்யப்படும்.
15. சென்னை மாநகரில் நோய் தொற்று உள்ளவர்களின் தொடர்புகளை கண்டறிவதற்கான குழுக்கள்
வலுப்படுத்தப்படுவதுடன், தொடர்பு இல்லாமல் நோய்தொற்று ஏற்படுகின்றதா என ஆராய்ந்து, அவ்வாறு ஏதும் இருப்பின்,அவர்களுடைய தொடர்புகளையும் விரைவாக கண்டறிய ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படும்.

16. நோய்த் தடுப்பு பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து தடையின்றி
வழங்குவதற்கான பிரத்யேகமாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
17. இதனால் அப்பகுதியிலிருந்து மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டிய சூழல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும்.
15 நோய்த் தடுப்பு பகுதிகளில் ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்ட முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர், இதய நோய், நீரிழிவு நோய் போன்ற நோய் உள்ளவர்களின் உடல்நிலையும்,
கர்ப்பிணி தாய்மார்களின் உடல்நிலையும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு தேவையான உதவிகள் செய்து தர வேண்டும்.கொரோனா வைரஸ் நோய் தொற்றினை கட்டுக்குள் கொண்டு வர, எடுக்கப்பட உள்ள இத்தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை தருமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags : businesses ,District Collectors ,CM Palanicami , Industries, Work, District Collectors, Chief Palanisamy
× RELATED சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான...