×

களக்காடு அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் பிடிபட்ட கரடி வனப்பகுதியில் விடப்பட்டது

களக்காடு: களக்காடு அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து இருவரை கடித்த கரடி மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. களக்காடு புலிகள் காப்பகத்தில் தற்போது கோடை காலம் என்பதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன.களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் பொத்தையில் கடந்த சில மாதங்களாக 4 கரடிகள் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தெற்கு அப்பர்குளத்தில் நேற்று முன்தினம் காலை 7 வயதுடைய ஆண் கரடி புகுந்து அங்குள்ள தெருக்களில் சுற்றி வந்தது. கரடியை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர், இளைஞர்கள் திரண்டு கரடியை விரட்டினர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் இளங்கோ தலைமையில் வனசரகர்கள் புகழேந்தி, பாலாஜி மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று கரடியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கரடி கடித்து குதறியதில் மேலஉப்பூரணியை சேர்ந்த விவசாயி செல்வராஜ், (60) வேட்டை தடுப்புக் காவலர் சுந்தர் படுகாயம் அடைந்தனர்.

நெல்லையில் இருந்து வரவழைக்கப்பட்ட கால்நடை மருத்துவர்கள் முத்துகிருஷ்ணன், மனோகரன் ஆகியோர் மூன்று முறை துப்பாக்கி மூலம் கரடிக்கு மயக்க மருந்து செலுத்தினர். இதனால் மயங்கிய கரடியை வனத்துறையினர் மீட்டு சென்றனர். பின்னர் கரடிக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அதன் பிறகு களக்காடு செங்கல்தேரி வனப்பகுதிக்கு கரடியை கொண்டு சென்றனர். அங்கு கரடிக்கு மயக்கம் தெளிய மீண்டும் மருந்துகள் வழங்கப்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து கரடி தன்நிலைக்கு வந்ததும் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

Tags : forest ,Kalakkad , bear, caught , forest, Kalakkad, left in the wild
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...