×

திருவண்ணாமலையில் ஊரடங்கு உத்தரவால் அறுவடை செய்தும் தோட்டத்திலேயே வீணாகும் வெற்றிலை: விவசாயிகள் வேதனை

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருகே பள்ளிக்கொண்டாப்பட்டு, சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமம் அருகே உள்ள சில பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் வெற்றிலை செடிகள் பயிரிட்டுள்ளனர். வெற்றிலைகளை செடிகளில் இருந்து 25 அல்லது 30 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்து விற்பனை செய்து வந்தனர். கடந்த மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டதால், விவசாயிகள் வெற்றிலைகளை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் முதலீடு செய்து எங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை, பெரும் நஷ்டமே ஏற்பட்டுள்ளது என வேதனையோடு தெரிவித்தனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட விவசாயி ராஜா என்பவர் கூறியதாவது: ஊரடங்கு உத்தரவால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாலும், சுப நிகழ்ச்சிகள் போதிய அளவு நடைபெறாததாலும், வெற்றிலைகள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 சென்ட் இடத்தில் வெற்றிலை தோட்டம் அமைத்துள்ளேன். இதற்கு ₹3 லட்சம் இதுவரை செலவழித்துள்ளேன். கடந்த சில மாதங்களாக தான் வெற்றிலை அறுவடை செய்து விற்பனை செய்து வந்தேன், ஒரு கூடை வெற்றிலை பறிக்க கூலி ₹100ம் வழங்கி வருகிறேன்.
விஷேச நாட்களில் ஒரு கூடை வெற்றிலை ₹500க்கும், மற்ற நாட்களில் ₹300க்கு விற்பனையானது. தற்போது, முழு ஊரடங்கு உத்தரவால் வெற்றிலைகள் வாங்குவதற்கு ஆட்களே இல்லை.இதனால் வெற்றிலைகள் செடிகளில் இருந்து அறுவடை செய்ய முடியாமல், முற்றி விட்டது.

குறிப்பிட்ட நாட்களுக்குள் அறுவடை செய்யாவிட்டால் அதனை பயன்படுத்த முடியாது. இவ்வாறு, வெற்றிலைகள் செடிகளிலேயே வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. காய்கறிகள் என்றால் விற்பனை செய்து விடலாம். ஆனால் வெற்றிலைகளை எவ்வாறு விற்பனை செய்வது. பறித்து சென்றால் குறைந்த அளவு வெற்றிலைகள் மட்டுமே விற்பனையாகிறது. அதுவும் மிக குறைந்த விலையாக ஒரு கூடை ₹100க்கு விற்பனையாகிறது. ஒரு கூடை வெற்றிலை பறிக்கும் கூலி ₹100, அதுமட்டுமின்றி பறிக்கும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்க வேண்டும். இதில் எங்களுக்கு பெரும் நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது. பல லட்சம் செலவு செய்தும், முதலீடு செய்துள்ள தொகையை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பது பெரும் வேதனையாக உள்ளது. இதற்கு வேளாண்மை துறை மூலம் எந்த மானியமும், நலத்திட்ட உதவிகளும் எங்களுக்கு கிடைக்காது. இது தான் வெற்றிலை பயிரிட்டுள்ள விவசாயிகளின் நிலை என வேதனையுடன் தெரிவித்தார்.

Tags : Thiruvannamalai ,garden ,Harvesting , Harvesting , curfew , Thiruvannamalai
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...