×

கொரோனா ஊரடங்கால் முடங்கியது கொடைக்கானல் பல்லாயிரம் தொழிலாளர்கள் பரிதவிப்பு: தமிழக அரசு கருணை காட்டுமா?

கொடைக்கானல்:  கொரோனா ஊரடங்கால் கொடைக்கானலில் சுற்றுலாத் தொழிலும், அதனை சார்ந்த தொழில்களும் முடங்கிக் கிடக்கின்றன. இதனால், பல ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படுகிறது. இங்கு, ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வருவர். இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் கொடைக்கானலில் சுற்றுலாத்தொழில் கடுமையாக முடங்கிக் கிடக்கிறது. மேலும், இந்த தொழிலுடன் தொடர்புடைய தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், சிறிய  தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள், வாகன ஓட்டிகள், சுற்றுலா வழிகாட்டி,  ஓட்டுநர்கள், சுற்றுலா மையங்களில் உள்ள சிறு வியாபாரிகள் என்று பல்வேறு  தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொழில்களை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

தங்கும் விடுதிகளுக்கு பூட்டு:  கொடைக்கானலில் நூற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இதில் பல விடுதிகள் கடந்தாண்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. மீதமுள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் கொரோனாவால்  பூட்டிக் கிடக்கிறது. இதனால், விடுதி நிர்வாகிகள், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். மேலும், உணவு விடுதிகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
முடங்கிய டிராவல்ஸ் தொழில்: சுற்றுலாத்தொழிலில் மிக முக்கிய பங்கு வகிப்பது டிராவல்ஸ். இதன் மூலம் பல ஆயிரம் ஓட்டுனர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். இவர்கள் சுற்றுலாத் தொழிலையை நம்பியே வாழ்ந்து வந்தனர். தினசரி சுற்றுலா வாகனங்களை ஓட்டி, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் வாழ்ந்து வந்தனர். சீசன் நேரத்தில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து செல்வது வழக்கம். தற்போது டிராவல்ஸ் உரிமையாளர்களும், டிரைவர்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கொடைக்கானலில் 30க்கும் மேற்பட்ட  டிராவல்ஸ் நிறுவனங்கள் உள்ளன. இவைகள் மூலம் பஸ், வேன், சொகுசு கார்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் அனைத்து சுற்றுலாப்பயணிகளை நம்பியே உள்ளன. தற்போது தொழில் இல்லாததால், வாகனங்களுக்கு வாங்கிய கடனை கட்ட முடியாமலும், தங்களையே நம்பியுள்ள ஓட்டுனர்களுக்கு சம்பளம் தரமுடியாமலும் தவிக்கின்றனர். கொடைக்கானலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. சிறு வியாபாரிகள் பாதிப்பு:  கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகடைகள் உள்ளன. இவைகள் அனைத்தும் சுற்றுலாப்பயணிகளை நம்பியே உள்ளன. ஆண்டில் கோடை சீசனில் 2 மாதம் சம்பாதிக்கும் பணத்தை வைத்து பாக்கியுள்ள பத்து மாதம், இவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டும். இவர்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.  இதேபோல நகரில் சிறு, சிறு தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளை குத்தகைக்கு எடுத்து நடத்துபவர்களின் நிலையும் மோசமாக உள்ளது.

படகு தொழிலும் மூழ்கியது :  கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்வது என்பது ஒரு அலாதியான இன்பம். இந்த படகுகளை இயக்க நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களும் சுற்றுலாத்தொழிலையே நம்பியுள்ளனர். இவர்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். இதேபோல, சுற்றுலாப்பயணிகளுக்கு சைக்கிள்களை வாடகைக்கு விடும் கடைக்காரர்களின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது. குதிரை ஓட்டுனர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் ஷிப்ட் முறைப்படி குதிரைகளை ஏரிப்பகுதியிலும், பைன் மரக்காடுகளில் ஓட்டி வந்தனர். இவர்களது வாழ்வாதாரமும் முடங்கியுள்ளது. எனவே, கொடைக்கானலில் சுற்றுலாத் தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Tens of thousands ,Kodaikanal ,Tamil Nadu ,government , Thousands, Kodaikanal workers paralyzed, Coronation of Tamil Nadu government?
× RELATED உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம்!!