×

பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் உடல்நல குறைவால் மும்பையில் காலமானார்; சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்

மும்பை: பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் உடல்நல குறைவால் மும்பையில் காலமானார். ராஜேஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 53 வயதான பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் டெல்லி தேசிய நாடகப் பள்ளியில் படித்தவர். 1980-களில்  மும்பைக்கு வந்த இர்ஃபான் தொடக்கத்தில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். 2017-ல் இவர் நடித்து வெளியான ஹிந்தி மீடியம் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் பெரிய வெற்றி பெற்றது.

நடிகர் இர்பான் கான். இவர், ஜுராசிக் வேர்ல்ட் தி ஜங்கிள் புக், தி அமேஸிங் ஸ்பைடர்மேன், லைஃப் ஆஃப் பை, ஸ்லம்டாக் மில்லியனர் ஆகிய ஹாலிவுட் படங்களிலும் நடித்து நடித்து உலகப் புகழ் பெற்றவர். யதார்த்தமான நடிப்பின் மூலம்  ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் இர்பான் கான். 2011-ல் பான் சிங் தோமர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். இதற்கிடையே, நியூரோ எண்டாக்ரின் டியூமர்  எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இரண்டு வருடங்களாக இவர் வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை  அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மறைந்த இர்பான் கானுக்கு மனைவி சுதாபா சிக்தர், மகன்கள் பாபில், அயன் உள்ளனர். நடிகர் இர்பான் கான் தாயார் சயீதா பேகம் கடந்த வாரம் ராஜேஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இர்பான் கான் மறைவுக்கு சினிமா ரசிகர்களும், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இர்பான் கானுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக #IrrfanKhan என்ற ஹாஷ்டாக் டுவிட்டரில் டிரெண்டாகி இந்தியளவில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags : Irrfan Khan ,Cinema celebrities ,Mumbai ,Famous Hindi , Famous Hindi actor Irrfan Khan passed away in Mumbai due to ill health; Cinema celebrities, fans condolences
× RELATED மும்பையில் காணப்பட்ட வித்தியாசமான காட்சி….