×

சேலத்தில் கொரோனா வார்டில் பணி மன உளைச்சலில் தவித்த நர்சுகளுக்கு நட்சத்திர ஓட்டலில் தங்க ஏற்பாடு

* விரும்பிய உணவை ருசிக்கவும் அனுமதி

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் பணிபுரிந்து வரும் நர்சுகள், நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விரும்பிய உணவை ருசிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனையில் ஐசோலேசன் வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தொற்று உள்ளவர்களின் குடும்பத்தினர் மற்றும் அறிகுறியுள்ளவர்களை தனிமைப்படுத்த மாவட்டம் முழுவதும் சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் இதுவரை 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, ஐசோலேசன் வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனையடுத்து, அங்கு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், ஒரு வாரத்திற்கு தொடர்ச்சியாக அந்த வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள், வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மாறாக, மருத்துவமனையிலேயே அடுத்த 7 நாட்களுக்கு தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் முடிவு நெகட்டிவ் என வந்தால் மட்டுமே, வீட்டிற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனிடையே, ஐசோலேசன் வார்டில் பணியில் இருக்கும் நர்சுகள் தங்குவதற்கு உரிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சுகாதாரமற்ற மற்றும் சத்தில்லாத உணவுகளை வழங்குவதாகவும் இதனால் மன உளைச்சலில் தவிப்பதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, தினகரன் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் சேலம் அரசு  மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டதில், மேற்கண்ட குறைபாடுகள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, ஐசோலேசன் வார்டில் பணிபுரிந்து வரும் நர்சுகள் அனைவரும், 5 ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக, நர்சுகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்கள் விரும்பும் உணவை, விரும்பிய நேரத்தில் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், மன அழுத்தத்தில் இருந்த நர்சுகள் நிம்மதியடைந்துள்ளனர்.

Tags : nurses ,Corona Ward ,Salem ,star hotel , Arrangements,star hotel, nurses, depressed ,Corona Ward in Salem
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...