×

பவானி ஆற்றில் 800 இடங்களில் தண்ணீர் திருட்டு கடைமடைக்கு செல்லாததால் விவசாயிகள் கண்ணீர்

ஈரோடு: பவானி ஆற்றில் 800க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் திருட்டு நடைபெற்று வருவதாகவும், இதனால் கடைமடைக்கு தண்ணீர் செல்லாமல் உள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால் மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் ஆகிய பாசனங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் போதுமான தண்ணீர் இருந்த போதிலும் தண்ணீர் சிக்கனம் என்ற பெயரில் முறை வைத்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பவானி ஆற்றில் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் திறக்கப்படும் தண்ணீரை சிலர் சட்டவிரோதமாக மின்மோட்டார் வைத்து திருடி வருவதால் பாசன வாய்க்காலில் தண்ணீர் மிக குறைவாக செல்கிறது. இதனால், கடைமடைக்கு தண்ணீர் செல்லாமல் நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். தண்ணீர் திருட்டினை பொதுப்பணித்துறையினர் கண்டு கொள்ளாமல் ஆதரவாக இருப்பதால் இந்த அவலம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி கூறியதாவது:தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 125 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் 750 கன அடி நீர் திறக்கப்படுவதாக பொதுப்பணித்துறையினர் கூறுகின்றனர். ஆனால், இதில் பெரும்பகுதி தண்ணீரை சட்டவிரோத கும்பல் மின்மோட்டார்களை வைத்து திருடிவிடுகின்றனர்.

பவானி ஆற்றில் 800க்கும் மேற்பட்ட இடங்களில் இது போன்ற தண்ணீர் திருட்டு நடைபெறுகிறது. இந்த திருட்டு கும்பலுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை என பொதுப்பணித்துறையினர் பின்வாங்குகின்றனர். இதனால், பாதிக்கப்படுவது பாசன விவசாயிகள் மட்டுமே. ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறப்பின்போது இதே பிரச்னைதான் ஏற்படுகிறது. அணையில் நீர் மட்டம் திருப்திகரமாக இருக்கின்ற போதிலும் பொதுப்பணித்துறையினர் முறை வைத்து தண்ணீர் திறப்பது ஏன்? என தெரியவில்லை. தண்ணீர் திருட்டு காரணமாக பாசன பகுதியில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாமல் நெல்வயல் வெடித்து காணப்படுகிறது. நெற்பயிர் கதிர் பிடிக்கும் பருவத்தில் தண்ணீர் இல்லாமல் உள்ளதால் கடும் நஷ்டத்தை விவசாயிகள் சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோபி வட்டம், கருப்பகவுண்டன்புதூர் எனும் கிராமத்தில் 2 பொக்லைன் உதவியுடன் பவானி ஆற்றில் 25 அடி நீளத்திற்கு தண்ணீர் திருடுவதற்காக கரையை உடைத்துள்ளனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் வருவாய்துறை, பொதுப்பணித்துறையினரிடம் விவசாயிகள் சார்பில் புகார் தெரிவித்தோம். ஆனால், இதுவரை கரையை உடைத்த கும்பல் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. ஊரடங்கு அமலில் உள்ள போது எப்படி பொக்லைன் வாகனம் அங்கு வந்தது என தெரியவில்லை. விவசாய விளைபொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களை சுற்றி வளைத்து பிடிக்கும் அரசு நிர்வாகம், தண்ணீர் திருட்டுக்காக கரையை சேதப்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்யாமல் அந்த கும்பல்களுக்கு துணை போவது வேதனையளிக்கிறது. தண்ணீர் திருட்டு மற்றும் கரை உடைப்பு ஆகிய சம்பவங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதோடு கடைமடை வரை தண்ணீர் செல்ல பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தளபதி கூறினார்.

Tags : locations ,Bhavani River , Farmers , tears , 800 locations , Bhavani River is not going on
× RELATED கொங்கு மண்டலத்துக்குட்பட்ட 22 இடங்களில் வருமானவரி சோதனை