×

சென்னை உட்பட 3 மாநகராட்சியில் நாளை மட்டும் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி; முழு ஊரடங்கு முடியவுள்ள நிலையில் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை, மதுரை, கோவை மாநகராட்சியில் நாளை ஒருநாள் மட்டும் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் 24ம்  தேதி முதல் மே 3ம் தேதி வரை ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊடரங்கு  அமலில் இருந்தாலும் பொதுமக்களில் வெளியே சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் மற்றும் நூதன  தண்டனை விதித்தாலும், நாளுக்கு நாள் பொதுமக்கள் வெளியே வருவது அதிகரித்துக் கொண்டே வருகிறது.

குறிப்பாக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரப்பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. சென்னையில் மட்டும் தினசரி 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று மட்டும் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நகர் பகுதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 26ம் தேதி காலை 6 மணியில் இருந்து (இன்று) 29ம் தேதி இரவு 9 மணி வரை தொடர்ந்து 4 நாட்களும்,  சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் கடந்த 26-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. அதில் சேலத்தில் கடந்த 25-ம் தேதியை தொடங்கிய முழு ஊரடங்கு நேற்று இரவுடன் முடிவடைந்தது. திருப்பூர்  மாநகராட்சியிலும்,  3 நாள் முழு ஊரடங்கு நேற்று இரவுடன் முடிந்தது. மீதமுள்ள சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 3 மாநகராட்சியில் இன்று இரவு 9 மணியுடன் முழு ஊரடங்கு முடிகிறது.  

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 3 மாநகராட்சிகளில், 4 நாட்களும் மருந்து கடைகள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ், பத்திரிகைகள், தொலைக்காட்சி பணியாளர்களை தவிர வேறு யாரும்  வெளியே வர அனுமதியில்லை. மளிகை கடை, காய்கறி கடை, பேக்கரி உள்ளிட்ட எந்த கடைகளும் திறக்கவும் அனுமதிக்கவில்லை. இன்றுடன் முழு ஊரடங்கு முடியவுள்ள நிலையில், தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப்பகுதிகளில், இன்று (29.4.2020) புதன்கிழமை இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், நாளை முதல் 26.4.2020க்கு முன்பு இருந்த நிலைப்படி  ஊரடங்கு தொடரும்..!

* எனினும், 30.4.2020 (வியாழக்கிழமை) அன்று மட்டும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப்பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக காலை 6 மணி முதல் மாலை 5மணி வரை அத்தியாவசியப்  பொருட்களை விற்கும் கடைகள்திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

* 1.5.2020 (வெள்ளிக்கிழமை) முதல் மேற்கண்ட அத்தியாவசியப்பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

* கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடமிருந்துமற்றவர்களுக்கு எளிதாகவும், அதிதீவிரமாகவும் பரவும் தன்மையுள்ளகடும் நோய் தொற்று என்பதால், பொதுமக்கள் அத்தியாவசியப்பொருட்களை வாங்க அவசரம் காட்டாமல்,  நிதானமாக, பொறுமை காத்து,சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடித்து, முகக் கவசம் அணிந்து கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Tags : shops ,corporations ,Chennai ,Tamil Nadu Government ,Government ,municipalities , Permission to open shops in 3 municipalities including Chennai till 5 pm tomorrow; Government announces full curfew
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி