×

ரேசன் கடைகளில் வண்டு,புழுக்களுடன் வழங்கப்படும் அரிசி: பொதுமக்கள் புகார்

சிவகங்கை:  சிவகங்கை மாவட்ட ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசி வண்டு, புழுக்களுடன் சாப்பிட முடியாத வகையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரேசன் கடைகளில் அரிசி, பாமாயில் உள்ளிட்ட சில பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் இயங்கும் 625 ரேசன் கடைகள் உட்பட மொத்தம் 802 ரேசன் கடைகள் உள்ளன. மொத்தம் 3லட்சத்து 89ஆயிரத்து 735ரேசன் கார்டுகள் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் ஏப்ரல் மாதத்திற்கான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே மாதத்திற்கான பொருட்கள் மே.4ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாதத்தில் வழங்கப்பட்டுள்ள புழுங்கல் அரிசி தரமற்றதாக உள்ளது. அனைத்து அரிசியும் பழுப்பு நிறத்துடனும், கருப்பு நிறத்திலும், கட்டியாகவும், வண்டுகள், புழுக்களுடன் காணப்படுகிறது.

அதிகப்படியான நாற்றம் உள்ளது. சமைத்து சாப்பிடும் வகையில் இல்லாத இந்த அரிசியால் எவ்வித பயனும் இல்லை. இதனால் இவைகளை கோழிகள் மற்றும் கால்நடைகளுக்கே உணவாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரிசியை சமைத்து சாப்பிட்டால் உடல் நலக்குறைவு தான் ஏற்றபடும். ஒரு சில குடும்ப அட்டை தாரர்கள் இந்த அரிசியை வாங்க மறுத்துள்ளனர். சிலர் இந்த அரிசியினை மீண்டும் அறவையின் மூலம் பாலிஷ் செய்து சமைத்து சாப்பிடுகின்றனர்.
திருமலைைய சேர்ந்த அய்யனார் கூறியதாவது:சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழிலாளர் மற்றும் ஏழை குடும்பத்தினர் மிகவும் பாதிப்படைந்து உள்ளனர். சாப்பாட்டிற்கே வழியின்றி காணப்படும் இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் ரேசனில் வழங்கப்படும் அரிசி மிகவும் தரம் குறைவாக உள்ளது. எவ்வித பயனும் இல்லாத இந்த அரிசியை வழங்குவது வீண். எனவே மே மாதம் வழங்க உள்ள அரிசியை தரமானதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags : Rice ,ration stores , Rice supplied , beetle, worms , ration stores: public complaint
× RELATED 1,250 டன் ரேஷன் அரிசி காட்பாடி வருகை