×

வெளிக்காற்று இல்லாத இடங்களில் அடர்த்தி அதிகம்; காற்றிலும் கொரோனா வைரஸ் மூலக்கூறு அணு இருக்கு...சீன விஞ்ஞானி குழு அறிக்கை

பீஜிங்: காற்றிலும் கொரோனா வைரஸ் மூலக்கூறு அணு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றி தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. இதில் ஒவ்வொரு நாடுகளின் தொற்று பரவல் நிலைமைக்கு ஏற்ப ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஆனால், அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் விஞ்ஞானி கி லன் தலைமையிலான குழு ஒன்று, கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய, வூஹான் நகரில், இரு அரசு மருத்துவமனைகள் உட்பட 31 இடங்களில் காற்றில் உள்ள கிருமிகள் குறித்து ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வறிக்கை தற்போது ஜர்னல் நேச்சர் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்ள மருத்துவமனைகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் மேற்கொண்ட ஆய்வில், காற்றில் கொரோனா வைரஸ் மூலக்கூறு அணு உள்ளது தெரியவந்தது. ஆனால், அவைதான் கொரோனா வைரஸ் பரவ காரணமா என்பதை உறுதிப்படுத்த மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, காற்றோட்டமுள்ள நோயாளிகளின் அறைகளில், இந்த மூலக்கூறு அணுவின் அடர்த்தி மிகக் குறைவாக காணப்பட்டது என்றும் கழிப்பறை போன்ற வெளிக்காற்று வசதியற்ற இடங்களில், அடர்த்தி அதிகமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்குள்ளும், வெளியிலும் அதிகமானோர் நடமாட்டம் காரணமாக, மூலக்கூறு அணு அதிகம் காணப்பட்டது.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பாதுகாப்பு ஆடைகளை அகற்றி, வேறு உடைகளை அணியும் அறைகளில், மூலக்கூறு அணுவின் அடர்த்தி அதிகமாக காணப்பட்டது. பாதுகாப்பு ஆடைகளில் காணப்படும் அணு உதிர்ந்து, மீண்டும் காற்றில் கலந்ததுதான் இதற்கு காரணம் என கருதப்படுகிறது. கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட, துாய்மை நடவடிக்கைகளுக்குப் பின், காற்றில் உள்ள கொரோனா வைரஸ் மூலக்கூறு அணு வெகுவாக குறைந்து இருந்தது. குறிப்பாக, பொது இடங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றில், கொரோனா மூலக்கூறு அணு குறைவாகவே இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாளுக்கு நாள் கொரோனா வைரசால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் காற்றில் கொரோனா வைரஸ் மூலக்கூறு அணு உள்ளதாக வெளியான தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : areas ,scientists ,Chinese , Densities are greater in areas that are not exposed; The presence of a corona virus molecule in the air ... Chinese scientists report
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...