×

மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி பரிந்துரை சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க வேண்டும்

புதுடெல்லி: ‘‘கொரோனா பாதிப்புக்குப் பிறகு சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவிற்கு ஈர்க்க தயாராகுங்கள்’’ என மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி பரிந்துரைத்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையும் வெகுவாக பாதித்து வருகிறது. உலக பொருளாதாரமே அடியோடு வீழ்ந்துவிட்டது. இதனால், உலகின் நம்பர்-1 வல்லரசு நாடான அமெரிக்கா, சீனா மீது கடுமையான கோபத்தில் உள்ளது. கொரோனா பரவ சீனாதான் காரணம் என்பதை கண்டறிந்து அந்நாட்டின் மீது பல பொருளாதார தடைகளை விதிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இதேபோல பல உலக நாடுகளின் தலைவர்களும் சீனாவை நேரடியாக குற்றம்சாட்டி உள்ளன.

இதன் காரணமாக, மிகப்பெரிய உற்பத்தி நாடான சீனாவில் இருந்து, கொரோனாவுக்குப் பிறகு, பல பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேறும் என கருதப்படுகிறது. தங்களின் உற்பத்திக்கான முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளன. இது இந்தியாவுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது. சீனாவை புறக்கணிக்கும் நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்யவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. இதுகுறித்து முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொடர்பாக நேற்று முன்தினம் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, ‘‘கொரோனா நெருக்கடிக்குப் பிறகு, பல்வேறு தொழில் துறை நிறுவனங்கள் சீனாவை தாண்டி தொழில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பரிசீலிப்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஏராளமான மனிதவள திறனும், மேம்பட்ட உள்கட்டமைப்பும் கொண்ட இந்தியாவில் இந்த முதலீடுகளை ஈர்ப்பதற்கு மாநிலங்கள் தயாராக வேண்டும். அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து விரிவான திட்டத்தில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்’’ என கூறி உள்ளார். கொரோனாவை ‘வுகான் வைரஸ்’ என்றும், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு அடிபணிந்ததாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட சில உலக தலைவர்களைப் போல பிரதமர் மோடி எந்த ஒரு நிலையிலும் சீனாவை சீண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Modi ,companies ,China ,state chiefs ,state companies , State Chief Ministers, Prime Minister Modi, Companies
× RELATED எரியிற வீட்ல பிடுங்குற வரைக்கும்...