×

முப்பதாண்டாக போராடியும் கிடைக்காத வெற்றி கொரோனாவால் சுத்தமானது கங்கை: ஒரு மாத ஊரடங்கில் சூப்பர்

புதுடெல்லி:  கடந்த முப்பது ஆண்டாக போராடியும் முடியாதது இப்போது கொரோனா ஊரடங்கால் முப்பதே நாளில் வெற்றி காண முடிந்தது. ஆம், கங்கை சுத்தமாகி விட்டது. கங்கை நீருக்கு  உண்மையான உயிர்த்தன்மை வந்துவிட்டது.   இந்தியாவின் புனிதமான நதி கங்கை என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், அந்த பெருமை எந்த காலத்திலும் இருந்ததில்லை. தொழிற்சாலைகளின் ரசாயன கலப்பு,  தனி மனித தவறுகளால் குப்பை கூளங்கள், ஏன், மனித உடல்களையும் மிதக்க விடுவது புனிதமாக நினைப்பதால் அதன் சுத்தம் அறவே போய் நாளாகிவிட்டது. அரசும் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை ஒதுக்கி பல திட்டங்களை போட்டது. ஆனால், எதிலும் வெற்றி காண முடியவில்லை. இந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் இப்போது ஒரு பைசா செலவில்லாமல் சுத்தமாகி விட்டது.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கை வருமாறு:   கங்கை நதி தண்ணீரில் ஆக்சிஜன் அளவு இதுவரை குறைந்து இருந்தது. தண்ணீரில் உயிர்த்தன்மையை அழிக்கும் நைட்ரேட் அதிகமாக இருந்தது. இப்போது, ஊரடங்களால் தொழிற்சாலைகளின் ரசாயன கலப்பு குறைந்து விட்டது. மக்களின் தவறான நடவடிக்கைகள் குறைந்து அசுத்தம் அறவே இல்லாத நிலை காணப்படுகிறது.   நாங்கள் 36 இடங்களில் கங்கையில் தண்ணீரின் தரக்கட்டுப்பாடு குறி்த்து ஆராய்ந்து வருகிறோம். ஊரடங்குக்கு முன்பும் பின்பும் ஆய்வு செய்ததில் பெரும் மாற்றம் இருப்பது தெரிந்தது. பயோகெமிக்கல் ஆக்சிஜன் மற்றும் ரசாயன ஆக்சிஜன் கலப்பு  அறவே இல்லை.  மாறாக  நீருக்கு உயிர்த்தன்மை தரக்கூடிய ஆக்சிஜன் அதிகரித்து உள்ளது தெரிந்தது. நைட்ரேட் அறவே இல்லை.

 ஊரடங்குக்கு முதல் வாரம் மழை பெய்ததால் தண்ணீரில் பெரும் மாற்றம் காணப்படவில்லை. குப்பைகள், ரசாயன கலப்பு அடித்து செல்லப்பட்டது. அதன் பின், தொடர்ந்து ரசாயன கலப்பு  குறைந்து,  வீடுகளில் இருந்து வெளியேறும், பயன்படுத்தப்பட்ட நீர் மட்டும் கலந்து வந்தது. இதனால் கங்கை அசுத்தம் ஆகவில்லை.  இவ்வாறு மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில கூறப்பட்டுள்ளது.

அசுத்தங்கள்  
* கங்கை 97 நகரங்கள் வழியாக பயணிக்கிறது. இதில் வீட்டில் உபயோகித்த சாக்கடை தண்ணீர், ஆலைகளின் கழிவுநீர் கலக்கிறது. இதனால்,  350 கோடி லிட்டர் கனஅடி அசுத்த  கலப்பு சேர்கிறது.
* இதில் 110 கோடி  லிட்டர் மட்டுமே மறுசுத்திகரிக்கப்பட்டு மீதம் உள்ள 240 கோடி லிட்டர் கங்கையில் கலக்க விடப்படுகிறது. ஆலைகளின் பெரும் தவறு இது.
* ஆலைகளால் 30 கோடி லிட்டர் கனஅடி அளவுக்கு ரசாயன கலப்பு  கங்கையில் திறந்து விடப்படுகிறது.

Tags : Gorgana: A Superstar ,Corona ,Ganga , Corona, Gang, Curfew
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை