×

லட்சக்கணக்கானோர் வந்து சென்ற நிலையில் கொரோனாவின் மையமாக மாறும் கோயம்பேடு மார்க்கெட்? தனிமனித இடைவெளி கடைப்பிடிக்காததால் விபரீதம்

சென்னை: லட்சக்கணக்கானோர் வந்து சென்ற நிலையில், முறையான தனிமனித இடைவெளியையும் கடைபிடிக்காமல் மக்கள் முட்டி மோதிய கோயம்பேடு மார்க்கெட்டில்   கொரோனா தாக்கம் தீவிரமாகி இருப்பது வியாபாரிகள், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.   தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்ற மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் சென்னையில் மட்டும் அதன் தீவிரம் இன்னும் குறைந்தபாடில்லை. தமிழக அரசு தினமும் வெளியிட்டு வரும் புள்ளிவிவரங்களில் சென்னை தான் ‘டாப்’பில் இருக்கிறது. இந்தசூழ்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கோயம்பேடு மார்க்கெட்டில்  கொரோனா வைரஸ் பரவ தொடங்கி இருப்பது மக்கள், வியாபாரிகள் மட்டுமில்லாமல் சுகாதாரத்துறையினரிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

தெற்கு ஆசியாவிலே மிகப் பெரிய மார்க்கெட்டாக இருப்பது கோயம்பேட்டு மார்க்கெட் தான். இங்கு எப்போதும் லட்சக்கணக்கானோர் காய்கறி, பழம், பூ உள்ளிட்டவைகள் வாங்க வருவது வழக்கம். சென்னையில் தற்போது முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கோயம்பேடு காய்கறி, பழம், பூ  மார்க்கெட்டில் விடுமுறை அளித்துவிடுவார்கள் என பயந்துபோன மக்கள் சில மணிநேரத்தில் காய்கறி, பழங்கள் வாங்க லட்சம் பேர் வரை  கூடினர். கட்டுக் கடங்காத மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்களை போலீசாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போதும் கோயம்பேடு மார்க்கெட் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது.  இங்கு வரும் மக்கள் யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்று போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சூழ்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முன்தினம் யாரும் எதிர்பாராத நிலையில், கொரோனா வைரஸ் தொற்று சிலருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘இது மிகவும் ஆபத்தானது. ஒரு லட்சம் பேரில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது என்பது தெரியவில்லை. இனி வரும் காலங்களில் தான் அது தெரியவரும். தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த தவறிவிட்டது’’ என்றனர்.   அதாவது, கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரி ஒருவருக்கும், சலூன் கடை வைத்திருக்கும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 4 பேருக்கு வந்தால் உடனடியாக மார்க்கெட் மூடப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார். தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ள நோயாளியுடன் உள்ள தொடர்புகளை கண்டறியும் பணியை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அங்கு கடை வைத்துள்ள சாலிகிராமத்தை சேர்ந்த பூ வியாபாரி ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து சென்றவர்களால் சமூக தொற்று உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கோயம்பேடு மார்க்கெட் சென்ற பலருக்கு கொரோனா பரவியதா இல்லையா என்ற சந்தேகம் சுகாதாரத்துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை மூடும் முடிவில் சென்னை மாநகராட்சி உள்ளது. அல்லது வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : center ,Corona ,millions ,visitors ,space , Corona, Coimbatore Market, Curfew
× RELATED ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்