×

ஜெர்மனியை விட கூடுதல் இழப்பீடு கோரப்படும் சீனாவுக்கு எதிராக தீவிர விசாரணை: அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

வாஷிங்டன்:  கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக மிகத் தீவிரமான விசாரணையை  மேற்கொண்டுள்ளதாகவும், ஜெர்மனியை விட அதிக தொகையை இழப்பீடாக கோர  இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவின்  வுகானில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளவில்  தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை  30.50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதித்துள்ளனர். 2.11  லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில் தான்  அதிகபட்சமாக 10 லட்சம் பேர் வரை இதனால் பாதிப்படைந்துள்ளனர். 56,000க்கும்  மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்தே  அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவின் மீது வைரஸ் தொடர்பாக கடுமையான  விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், செய்தியாளர்களை நேற்று  சந்தித்த அதிபர் டிரம்ப் கூறியதாவது: சீனாவிலிருந்து தான் கொரோனா  வைரஸ் பரவியது என்பதை  பல விதத்தில் நிருபிக்க முடியும். இது தொடர்பாக  அமெரிக்கா தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. சீனாவின் செயல்கள் மகிழ்ச்சி  அளிக்கவில்லை. ஆரம்பத்திலேயே சீனா வெளிப்படைத் தன்மையுடன் இந்த வைரஸ்  குறித்து உலக நாடுகள் மத்தியில் எச்சரித்து இருந்தால், கொரோனா தடுப்பு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இது தடுக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக உலகம்  முழுவதும் பரவி இருக்காது. உரிய நேரத்தில் விசாரணை குறித்த முழு விவரங்கள் தெரிவிக்கப்படும்.

வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார  வீழ்ச்சிக்கு இழப்பீடாக ஜெர்மனி கேட்கும் தொகையை விட கூடுதலான இழப்பீட்டு  தொகையை அமெரிக்கா கோர உள்ளது. இது தொடர்பான இறுதித் தொகை இன்னும் முடிவு  செய்யப்படவில்லை. நிச்சயம் கணிசமான தொகையாகத் தான் கேட்கப்பட உள்ளது. இது  அமெரிக்கா, உலகிற்கு ஏற்பட்ட சேதமாகும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.


Tags : Trump ,investigation ,China ,US ,Germany , Germany, China, US President Trump
× RELATED தேர்தலில் தோற்றால் ரத்தகளறி ஏற்படும்:...