×

ஒடிசா எல்லையில் பள்ளம் தோண்டிய கிராம மக்கள் கர்ப்பிணியை டோலியில் அழைத்து சென்ற உறவினர்கள்: கொரோனா பயத்தால் ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: கொரோனா பயத்தால் ஒடிசா எல்லையில் கிராமமக்கள் பள்ளம் தோண்டினர். இதனால் ஆந்திராவை சேர்ந்த கர்ப்பிணியை டோலியில் கட்டி அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களில் காகுளம் மற்றும் விஜயநகரம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது. டெல்லியில் உள்ள மெட்ரோ ரயிலில் பணிபுரிந்து வந்த காகுளம் மாவட்டத்தை சேர்ந்த நபர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் அவர் மூலமாக அவரது குடும்பத்தினர் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், ஆந்திரா- ஒடிசா மாநில எல்லையில் 10 அடி ஆழத்திற்கு கிராம மக்கள் பள்ளம் தோண்டி உள்ளனர். ஆந்திராவில் இருந்து ஒடிசா மாநிலத்திற்கு யாரும் வராத வகையில் செய்தனர்.

இந்நிலையில், காகுளம் மாவட்டம், கொத்தூர் மண்டலம், அலந்தி பஞ்சாயத்து, திகுவராயகுடாவை சேர்ந்த வாணி என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை கொத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து வந்தனர். ஆனால் ஒடிசா எல்லை கிராமம் வழியாகவே செல்ல வேண்டி இருந்தது. அப்போது மில்காமில் கிராம மக்கள் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி இருந்ததால் மேற்கொண்டு எப்படி செல்வது என்று தெரியாத நிலையில் கர்ப்பிணியை அங்கிருந்த செவிலியர் மற்றும் அந்த பெண்ணின் உறவினர்கள் டோலி கட்டி 10 அடி பள்ளத்திற்கு இடையே மிகவும் சிரமத்துடன் பள்ளத்தில் இறக்கி மேலே கொண்டு வந்தனர்.

தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் கொத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரசவம் பார்த்தனர். கடும் சிரமத்திற்கு மத்தியில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாய் மற்றும் சேய் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நிறைமாத கர்ப்பிணியை டோலியில் கட்டி தூக்கிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : Relatives ,border ,Doha ,Odisha ,Andhra Odisha , Odisha, People, Pregnant, Corona, Andhra
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது