×

வங்கிகள் நிதி தள்ளாட்டத்தில் இருக்கும் நிலையில் மெகுல் சோக்‌ஷி, மல்லையா உட்பட 50 பேரின் 68,000 கோடி கடன் தள்ளுபடி

புதுடெல்லி: வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு தப்பி ஓடியமெகுல் சோக்‌ஷி உட்பட 50 பேரின் 68,000 கோடி கடனை வங்கிகள் தள்ளுபடி செய்தது ஆர்டிஐ மனு மூலம் அம்பலம் ஆகியுள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கை தொடர்ந்து நிறுவனங்கள் தொழில்துறைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. இந்த சூழ்நிலையில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறி வரி வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தொழில்துறையினருக்கு கடன் வழங்க ரிசர்வ் வங்கி நிதி வழங்கும் அளவுக்கு வங்கிகளின் நிலை படு மோசமாக உள்ளது. இத்தனைக்கும் நடுவில் மோசடி செய்தவர்களின் 68,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்தாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சாகேத் கோகலே என்பவர் தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவிற்கு ரிசர்வ் வங்கி இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இது குறித்து சிஎன்பிசி என்ற ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: கடன் தள்ளுபடி குறித்து சாகேத் கோகலே கூறுகையில், கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட்கூட்டத்தொடரில், கடன் தள்ளுபடி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார். இருப்பினும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாக்குர் ஆகியோர் இதற்கு பதில் அளிக்கவில்லை. இதை தொடர்ந்து, கடன் தள்ளுபடி தொடர்பாக இந்த விவரங்களை வழங்குமாறு, ஆர்டிஐ சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் மனு தாக்கல் செய்தேன். மத்திய அரசு வெளியிட மறுத்த மேற்கண்ட விவரங்களை ரிசர்வ் வங்கியின் பொது தகவல் அதிகாரி அபய் குமார் வெளியிட்டுள்ளார்.

என கூறினார். ரிசர்வ் வங்கி அவரிடம் அளித்த விவரத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை நிலுவையில் இருந்த 68,607 கோடி கடன் கணக்கீட்டு ரீதியாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக, கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் 5,492 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து வெளிநாடு தப்பியுள்ள மெகுல் சோக்ஷியின் நிறுவனமாகும். இந்த குழுமத்தை சேர்ந்த கிலி இந்தியாவின் 1,447 கோடி, நக்‌ஷத்ரா பிராண்ட்ஸ் நிறுவனத்தின் 1,109 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மெகுல் சோக்ஷி தற்போது ஆண்டிகுவா குடியுரிமை பெற்று தலைமறைவாக உள்ளார். இவரது உறவினர் வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் உள்ளார்.  

இதுபோல், சந்தீப் ஜூஜூன்வாலா மற்றும் சஞ்சய் ஜூஜூன்வாலாவின்  ரெய் அக்ரோ நிறுவன கடன் 4,314 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த ஓராண்டாக அமலாக்கத்துறை கண்காணிப்பில் உள்ளனர். தலைமறைவான மற்றொரு வைர வியாபாரி ஜதின் மேத்தாவின் வின்சம் டயமன்ட் ஜூவல்லரி நிறுவன கடன் ரூ 4076 கோடி , கான்பூரை சேர்ந்த ரோட்டோமேக் நிறுவனத்தின் ரூ. 2850 கோடி கடன் மற்றும் பஞ்சாப் குடோஸ் செமீ நிறுவனம் (ரூ 2,326 கோடி), ருசி சோயா இண்டஸ்டிரீஸ் (ரூ 2,212 கோடி), ஜூம் டெவலப்பர்ஸ் நிறுவனம் (ரூ 2,012 கோடி), அகமதாபாத்தை சேர்ந்த ஹரீஸ் மேத்தாவின் பார்எவர் பிரீசியஸ் ஜூவல்லரி டயமண்ட்ஸ் (ரூ 1,962 கோடி), விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனம் (ரூ. 1,943 கோடி) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் 1000 கோடி ரூபாய்க்கு கீழ் கடன் வாங்கிய 25 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் கடன் ரூ. 605 கோடி முதல் ரூ. 984 கோடி வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட 50 கடன் மோசடியாளர்களில் அதிக கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 6 பேர் வைரம் மற்றும் நகை தொழில்துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், ‘இந்த நிறுவனங்களின் கடன் தள்ளுபடி என்பது, வங்கிகளின் லாபத்தில் குறைத்துக்கொண்டு கடனுக்காக அவற்றை ஒதுக்கி வைப்பதாகும்.உதாரணமாக, ஒருவர்100 கோடி கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை வசூலிக்க வழியில்லை என தெரிய வந்தால், வங்கிகள் தங்களுக்கு கிடைத்த லாபத்தில் அதை கழித்துக்கொள்ளும்.

அதாவது, ₹200 கோடி லாபம் வந்திருந்தால் அதில் கடன் தொகையான 100 கோடியை கழித்து விட்டு, வங்கிக்கு கிடைத்த லாபம் 100 கோடி என அறிவிக்கப்படும். இந்த கடன் தள்ளுபடி, கடன் வாங்கியவர்களுக்கும் தெரிவிக்கப்பட மாட்டாது. அதேநேரத்தில், கடன் நிலுவையிலும் காண்பிக்கப்பட மாட்டாது. கடன் வாங்கியவர் ஒரு வேளை கடனை கொடுத்தால், அது கடனில் வரவு வைக்கப்படும். டெக்னிகலாக கடன் தள்ளுபடி என சட்டப்பூர்வ வார்த்தையில் கூறினாலும், வங்கிகளுக்கு இது நஷ்டம்தான். ஆனால் நிதியில்லை என்று கூறி, அரசு ஊழியர்களின் பஞ்சப்படி முடக்கப்படுகிறது’’ என்றார்.

கடன் வாங்கிய நிறுவனம்                                தள்ளுபடி
கடன் தொகை
கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம்                              5,492 கோடி
ரெய் அக்ரோ லிமிடெட்                             4,314 கோடி
வின்சம் டயமண்ட் அண்ட் ஜூவல்லரி           4,076 கோடி
ரோட்டோமேக் குளோபல் நிறுவனம்           2,850 கோடி
குடோஸ் கெமி லிமிடெட்                             2,326 கோடி
ருசி சோயா இன்ட்ஸ்டிரீஸ்                             2,212 கோடி
ஜூம் டெவலப்பர்ஸ்                              2,012 கோடி
பார்ரெவர் பிரீசியஸ் ஜூவல்லரி & டயமண்ட்ஸ்     1,962 கோடி
கிங்பிஷர் ஏர்லைன்ஸ்                             1,943 கோடி
கிலி இந்தியா                                               1,447 கோடி



Tags : Mallya ,banks ,Mukul Chokshi , Banks Finance, Megul Chokshi, Mallya, Debt Relief
× RELATED பத்திர பதிவு அதிகாரிகள் மாற்றம்