×

மலர், பழக்கடைகள் மாதவரம் பஸ் நிலையத்துக்கு மாற்றம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வர தடை: நாளை முதல் அமல்

* சில்லரை விற்பனை கிடையாது
* சிஎம்டிஏ அறிவிப்பு

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளை முதல் பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டு இருப்பதாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அத்தியாவசிய ெபாருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏராளமான பொதுமக்கள் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும் வந்து சென்றனர். அவ்வாறு வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மாஸ்க் அணியாமலும் கூட்டம், கூட்டமாக வாங்கி சென்றதன் விளைவாக, கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரி, வந்து சென்ற பொதுமக்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், கோயம்பேடு மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் சிஎம்டிஏ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட்டை 3 ஆக பிரித்து இடம் மாற்ற திட்டமிடப்பட்டன. இது தொடர்பாக நேற்று முன்தினம் சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், சென்னை காவல்துறை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கோயம்பேடு வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட்டை மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து இரண்டாவது நாளாக மீண்டும் சிஎம்டிஏ அதிகாரிகள் கோயம்பேடு வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கோயம்பேடு மார்க்கெட்டை மாற்றுவது தவிர வேறு வழியில்லை என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டை மாற்ற ஒரு சில வியாபாரிகள் சம்மதம் தெரிவித்தனர். ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், கொரோனாவை கட்டுப்படுத்த கோயம்பேடு மார்க்கெட் தற்காலிகமாக மாற்றப்படும் என்று சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் திட்டவட்டமாக தெரிவித்தார். அதன்பேரில் நாளை முதல் ேகாயம்பேடு மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் நேரடியாக வரை தடை செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு வணிக வளாகத்தில் தற்போது நடைபெற்று வரும் சில்லறை விற்பனை முழுவதுமாக தடை செய்யப்படுகிறது. சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அந்தெந்த பகுதிகளில் உள்ள 245 திறந்தவெளி மைதானம் மற்றும் பேருந்து நிலையத்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வந்த பூ மார்க்கெட் மற்றும் பழங்கள் அங்காடி நாளை முதல் மாதவரம் ேபருந்து நிலையத்தில் மறு அறிவிப்பு வரும் வரை விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் ஏற்றி வரும் வெளி மாநில வாகனங்கள் மற்றும் வெளிமாவட்ட வாகனங்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்களை இறக்கி வைத்த பின் வெளியேற்றப்படும்.

அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை சென்னையில் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் சில்லறை விற்பனைக்கு காய்கறிகள் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. காய்கறி அங்காடிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அட்டவணையானது கோயம்பேடு உணவு தானிய அங்காடிக்கும் பொருந்தும். இந்த நடைமுறை நாளை முதல் தொடருகிறது.  ஊரடங்குக்கு பிறகும் இம்முறை தொடரும். தற்போது, விநியோக நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் காய்கறி விற்பனை தொடரும். சிஎம்டிஏ இணையதளமும் புக்கிங் செய்வது தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
 

Tags : bus station ,public ,Madhavaram ,Flower ,Palakkataikal Madavaram ,CMBT , Flower, palakkataikal, Madavaram bus station, Koyambedu Market
× RELATED படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம்